Last Updated : 12 Oct, 2020 04:33 PM

 

Published : 12 Oct 2020 04:33 PM
Last Updated : 12 Oct 2020 04:33 PM

அமெரிக்காவின் இரு பொருளாதார நிபுணர்களுக்குப் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு: எந்தக் கண்டுபிடிப்புக்காக விருது, முக்கியத்துவம்?

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வென்ற பால் மில்க்ரோம், ராபர்ட் வில்ஸன் : படம் உதவி | ட்விட்டர்.

ஸ்டாக்ஹோம்

அமெரிக்காவைச் சேர்ந்த இரு பொருளாதார நிபுணர்களுக்கு 2020 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்தளித்து அறிவிக்கப்பட்டது.

பொருளாதாரத்தில் ஏலக் கோட்பாட்டை மேம்படுத்துதல், மற்றும் ஏலம் விடுதலில் புதிய முறையைக் கண்டறிதலுக்காக இரு பொருளாதார நிபுணர்களுக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை ஸ்டாக்ஹோமில் உள்ள கோரன் ஹேன்ஸன் தலைமையிலான நோபல் பரிசுக் குழுவினர் அறிவித்தனர். அமெரிக்காவைச் சேர்ந்த பால் ஆர் மில்க்ரோம், ராபர்ட் பி வில்ஸன் ஆகிய இரு பொருளாதார நிபுணர்களுக்கு 2020 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

எதற்கு முக்கியத்துவம்?

பால் மில்க்ரோம், ராபர்ட் வில்ஸன் இருவரும் சேர்ந்து பொருளாதாரத்தில் ஏலம் விடும் நடைமுறை எவ்வாறு நடக்கிறது என்பதை ஆய்வு செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் பண்டங்கள், பணிகளைப் பாரம்பரிய முறையில் விற்பனை செய்வது கடினமாக இருக்கும் நிலையில் அதை ஏலம் விடுவதற்குப் புதிய முறைகளைக் கண்டறிந்துள்ளனர்.

குறிப்பாக ரேடியா அலைவரிசைகளை விற்பனை செய்வது கடினமாக இருக்கும் நிலையில் அதை ஏலம் விடும் முறையில் புதிய முறையைக் கண்டறிந்தனர். இருவரின் கண்டுபிடிப்பு உலகமெங்கும் இருக்கும் வாங்குவோருக்கும், விற்போருக்கு்ம், வரிசெலுத்துவோருக்கும் நன்மையளிக்கிறது.

படம் உதவி ட்விட்டர்

இதில் பொருளாதார வல்லுநர் ராபர்ட் வில்ஸன், கண்டறிந்த ஏலக் கோட்பாட்டில் பொதுவான மதிப்பை அடிப்படையாக வைத்து புதிய ஏலக் கோட்பாட்டைக் கண்டுபிடித்துள்ளார். அந்த பொதுவான மதிப்பு தொடக்கத்தில் என்னவென்று யாருக்கும் தெரியாது. ஆனால், இறுதியில் பொதுவானதாக இருக்கும்.

பால் மில்க்ரோம் கண்டறிந்த ஏலக் கோட்பாட்டில் பொதுவான மதிப்புகளை மட்டும் அனுமதிக்காமல், தனிப்பட்ட மதிப்புகளையும் அனுமதிக்கிறார். ஏலம் கேட்க வரும் ஒவ்வொருக்கும் இடையே இது மாறுபடும். அதுமட்டுமல்லாமல் ஏலம் கேட்கவருவோர் கையாளும் முறைகள், ஏலம் முறைகள், ஏலம் விடுவோருக்கு அதிக வருவாய் கிடைக்க வேண்டும், வாங்குவோருக்கும் நியாயமான விலையில் இருக்க வேண்டும் என்பதையும் பால் மில்க்ரோம் ஆய்வு செய்துள்ளார்.

பால் மில்க்ரோம், வில்ஸன் இருவரும் கண்டறிந்த ஏல முறையின் அடிப்படையில்தான் கடந்த 1994-ம் ஆண்டு அமெரிக்க அதிகாரிகள், ரேடியோ அலைவரிசையைத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு விற்பனை செய்தனர். இதே முறையைத்தான் மற்ற நாடுகளும் பின்னர் பின்பற்றத் தொடங்கின.

பால் ஆர் மில்க்ரோம்

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் கடந்த 1948-ம் ஆண்டு பிறந்தவர் பால் ஆர் மில்க்ரோம். கடந்த 1979-ம் ஆண்டு ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று, அதே பல்கலைக்கழகத்தில் ஹியுமானிட்டிஸ் அன்ட் சயின்ஸ் பிரிவில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

வில்ஸன்

ராபர்ட் பி வில்ஸன் கடந்த 1937-ம் ஆண்டு அமெரிக்காவின் நெப்ரஸ்காவில் உள்ள ஜெனிவாவில் பிறந்தார். கடந்த 1963-ல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் டிபிஏ முடித்து, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x