Published : 11 Oct 2020 07:22 AM
Last Updated : 11 Oct 2020 07:22 AM

கரோனா வைரஸை மனிதர்கள் உருவாக்க முடியாது - பென்சில்வேனியா பல்கலைக்கழக பேராசிரியர் சூசன் வைஸ் உறுதி

“கோவிட்-19 நோயை விளைவிக்கும் சார்ஸ்-கோவ்-2 (SARS-CoV-2) என்ற கரோனா வைரஸ், இயற்கையாக உருவானதே அன்றி மனிதர்களால் ஆய்வுக் கூடங்களில் உருவாக்கப்பட்டதல்ல’’ என்று பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் பேராசிரியர் சூசன் வைஸ் கூறினார்.

சென்னையில் உள்ள டிஎன்க்யூ டெக்னாலஜீஸ் தொழில்நுட்பப் பதிப்பகமும் அமெரிக்காவில் உள்ள ஜனேலியா ஆய்வு மையமும் இணைந்து ‘டிஎன்க்யூ - ஜனேலியா இந்தியா கோவிட்-19 - 2020’ (TNQ-Janelia India COVID-19 Seminar 200) என்ற தலைப்பில் தொடர் இணையவழி கருத்தரங்குகளை ஒருங்கிணைத்திருக்கின்றனர். கோவிட்-19 குறித்தும் சார்ஸ் கோவிட்-19 குறித்தும் உலகளவில் ஆராய்ச்சிகளை இந்தியாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் உள்ள மருத்துவர்கள், அறிவியலாளர்கள், மாணவர்களுக்குக் கொண்டு செல்வதே இந்தக் கருத்தரங்கின் நோக்கம்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று ’கரோனா வைரஸ்: பழையதும் புதியதும்’ (Coronavirus: Old and New) என்ற தலைப்பில் நடைபெற்ற முதல் கருத்தரங்கில், பேராசிரியர் சூசன் வைஸ் தலைமையுரை ஆற்றினார். வைராலஜிஸ்ட்டும் அசோகா பல்கலைக்கழகத்தின் திரிவேதி உயிரி அறிவியல் பள்ளியின் இயக்குநருமான ஷாதித் ஜமீல், பெங்களூருவில் உள்ள உயிரியல் அறிவியல்களுக்கான தேசியக் கல்வி மையத்தின் இயக்குநர் சத்யஜித் மேயர் ஆகியோர் இந்தக் கருத்தரங்கில் உரையாற்றினர்.

இது கடைசி அல்ல

கோவிட்-19 நோயை விளைவிக்கும் சார்ஸ் கோவ்-2 என்ற கரோனா வைரஸானது பல்வேறு வழிகளில் செல்களில் புகுந்து பெருகுகிறது. அதே நேரம் இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்து, இந்த வைரஸ் இயற்கையாகத் தோன்றியது என்றுதான் முடிவெடுக்க வேண்டியுள்ளது. ஏனென்றால் மனிதன் உடலில் உள்ள ஓம்புயிரி செல்களை இவ்வளவு துல்லியமாகத் சென்றடையக் கூடிய வகையில் குறிப்பிட்ட மாற்றங்களை (mutation) அடையக் கூடிய நுண்கிருமியை மனிதர்களால் வடிவமைக்க முடியாது. எனவே, இந்த வைரஸ் ஆய்வகங்களில் உற்பத்தி செய்யப்பட்டிருக்க முடியாது என்று சூசன் வைஸ் தெரிவித்தார்.

இப்படி மனிதர்களிடையே பரவி நோய்களை விளைவிக்கும் வைரஸ்களில் சார்ஸ் கோவ்-2 கடைசியாக இருக்க போவதில்லை என்றும் அவர் எச்சரித்தார். உலகில் இதுவரை சார்ஸ் கரோனா வைரஸ் தாக்குதல் 2 முறையும். மெர்ஸ் (MERS) வைரஸ் தாக்குதல் ஒரு முறையும் நிகழ்ந்துள்ளன. மனித குலத்தின் மீதான அடுத்த வைரஸ் தாக்குதல் சார்ஸ் கரோனா வைரஸைவிட குறைவான வேகத்தில் பரவக் கூடிய அதேநேரம் அதிக உயிர்க்கொல்லித் தன்மை வாய்ந்த மெர்ஸ்-2 (MERS-2) ஆகவும் இருக்கலாம் என்று சூசன் வைஸ் குறிப்பிட்டார்.

இந்திய நிலை

இந்தியாவில் கோவிட்-19 நிலை குறித்துப் பேசிய ஷாஹித் ஜமீல், “இந்தியாவில் புதிதாகக் கண்டறியப்படும் கரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை கடந்த சில வாரங்களாகக் குறைந்திருக்கிறது. ஒட்டுமொத்த இறப்பு விகிதமும் குறைவாக உள்ளது. ஆனால், இன்னும் உலகளவில் ஒட்டுமொத்த கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கையில் இந்தியாவின் பங்கு 24 சதவீதம். ஒவ்வொரு நாளும் பதிவாகும் இறப்பு எண்ணிக்கையில் இந்தியாவின் பங்கு 19 சதவீதம். எனவே, நாம் தடுப்பு - பாதுகாப்பு நடவடிக்கைகளை எந்த விதத்திலும் குறைக்கவோ தளர்த்தவோ கூடாது” என்றார்.

”சார்ஸ் கரோனா வைரஸ்-2ன் குறிப்பிட்ட வடிவங்கள் (variants) அதிக மரணங்களை விளைவிக்கிறதா என்பதைக் கண்டறிவதற்கான பல்வேறு கூட்டு ஆராய்ச்சிகள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. அந்த ஆராய்ச்சிகளில் அதிக உயிர்க்கொல்லித் தன்மைகொண்டதாக எந்த வைரஸ் வடிவமும் கண்டறியப்படவில்லை” என்று சத்யஜித் மேயர் கூறினார்.

அடுத்த 2 இணையவழி கருத்தரங்குகள் அக்டோபர் 16, 23-ம் தேதிகளில் இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்குத் தொடங்குகின்றன. இவற்றில் பங்கேற்கும் ஆர்வம் இருப்போர் பின்வரும் இணையதளத்துக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம். (https://www.tnq.co.in/covid_19_seminar.html)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x