

கரோனாவிலிருந்து மீண்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானுக்கு மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் ஒரு வானொலி நிகழ்ச்சி பங்கேற்று ட்ரம்ப் பேசும்போது, “ஈரான் எங்களுக்கு எதிராக தீமையான செயல்கள் ஏதாவது செய்தால், இதற்கு முன் பார்த்திராத கடும் நடவடிக்கைகளைப் பார்க்க நேரிடும். அமெரிக்கா அதனைச் செய்யும்” என்றார்.
மேலும், நவம்பரில் நடைபெறும் தேர்தலில் நான் வெற்றி பெற்றால் ஈரானுடன் திரும்ப அணு ஆயுத ஒப்பந்தம் போடப்படும் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.
முன்னதாக, சுலைமானி கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று ஈரான் மிரட்டல் விதித்திருந்தது.
ஈரானின் முக்கியப் போர்த் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்திக் கொன்றது. அதைத் தொடர்ந்து ஈரான் ராணுவம், ஈராக்கில் இயங்கிவரும் அமெரிக்க ராணுவத் தளத்தில் தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். கடந்த 78 ஆண்டுகளில் நேரடியாக நடத்தப்பட்ட தாக்குதல் இதுவாகும். இந்நிலையில், இவ்விரு நாடுகளும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும், ஈரானுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அமெரிக்கா தொடர்ந்து பொருளாதாரத் தடை விதித்து வருகிறது. இதன் காரணமாக ஈரானின் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.