Published : 10 Oct 2020 02:05 PM
Last Updated : 10 Oct 2020 02:05 PM

மைக்ரோசாஃப்ட் ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதி

மைக்ரோசாஃப்ட் பணியாளர்கள் நிரந்தரமாக வீட்டிலிருந்து பணியாற்ற விரும்பினால் அனுமதி வழங்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், “மைக்ரோசாஃப்ட் நிறுவன ஊழியர்கள் கரோனா பரவல் காரணமாக வீட்டிலிருந்து பணி செய்வதையே நிரந்தரமாகத் தேர்ந்தெடுத்தால் அதற்கு நிறுவனம் அனுமதி அளிக்கிறது. அடுத்த ஜனவரி வரை நிறுவனத்தைத் திறக்க முடிவு செய்யப்படவில்லை என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கரோனா பரவல் நமக்கு கஷ்டமான காலகட்டத்தை உருவாக்கி உள்ளது என்றும், நாம் புதிய வழியில் நம் பணிகளைத் தொடர வேண்டும் என்றும் மைக்ரோசாஃப் ட் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரவல் மீண்டும் பல மாகாணங்களில் அதிகரித்து வருகிறது. 78 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கரோனா வைரஸ் 10 மாதங்களாக உலக நாடுகளின் செயல்பாடுகளைப் பாதித்துள்ளது. கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பல நாடுகளில் மீண்டும் கரோனா பரவல் தொடங்கியுள்ளது.

உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டச் சோதனையை நெருங்கியுள்ளன. குறிப்பாக, ஸ்புட்னிக் -5 என்ற பெயரிலான தடுப்பு மருந்தை ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இவ்வருட இறுதியில் கரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x