Last Updated : 10 Oct, 2020 01:45 PM

 

Published : 10 Oct 2020 01:45 PM
Last Updated : 10 Oct 2020 01:45 PM

இந்திய வடக்கு எல்லையில் 60,000 ராணுவ வீரர்களை சீனா நிறுத்தியுள்ளது: மைக் பாம்பியோ அதிர்ச்சித் தகவல்

இந்தியாவின் வடக்கு எல்லையில் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டருகே சீனா 60,000த்துக்கும் அதிகமான ராணுவ வீரர்களைக் குவித்துள்ளது என்று அமெரிக்க அமைச்சர் மைக் பாம்பியோ அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார்.

மேலும் சீனாவின் இந்தச் செயலை ’மோசமான நடத்தை’ என்று அவர் வர்ணித்தார்.

இந்திய-பசிபிக் நாடுகளின் அயலுறவு அமைச்சர்கள் குழு ‘குவாட் குழு’ என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர்கள் சமீபத்தில் டோக்கியோவில் சந்தித்தனர். கரோனாவுக்குப் பிறகு நேரடியாக சந்தித்த முதல் கூட்டமாகும் இது.

இந்திய-பசிபிக் மற்றும் தென் சீன கடல் பகுதிகளில் சீனாவின் அத்துமீறலும் ஆவேசமும் அதிகரித்துள்ளதையடுத்து இந்தக் கூட்டம் நடைபெற்றது.

சீனாவின் படைகள் குவிப்பு பற்றி இந்திய அரசு கவலையடைந்துள்ள நிலையில் மைக் பாம்பியோ, “இந்தியாவின் வடக்கு எல்லையில் சீனா 60,000த்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை நிறுத்தியுள்ளது.

4 பெரிய பொருளாதார நாடுகளான, 4 பெரிய ஜனநாயக நாடுகளான அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய குவாட் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்தோம். இதில் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஏற்படுத்திவரும் அச்சுறுத்தல்கள் பற்றி விவாதித்தோம்.

ஜெய்சங்கருடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக அமைந்தது. இந்த நான்கு நாடுகளின் மக்களும், சீன அச்சுறுத்தல் விவகாரத்தில் நாம் தூங்கி விட்டோம் என்று உணர்வதாக தெரிவித்தனர்.

பல பத்தாண்டுகளாக மேற்கு நாடுகள் சீனாவை நிரம்பவும் ஆதிக்கம் செலுத்த அனுமதித்து விட்டது. முந்தைய அரசு அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமைகளை சீனா திருடிச் செல்ல அனுமதித்தது. பல வேலைகளை அமெரிக்காவிடமிருந்து பறித்துள்ளது. இது போன்ற விஷயங்கள் தங்கள் நாடுகளிலும் நடந்துள்ளதாக குவாட் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் என்னிடம் கூறினர்.

சீனாவுக்கு எதிரான அச்சுறுத்தலில் ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகள் அமெரிக்காவின் உதவியை பெரிய அளவில் எதிர்நோக்குகின்றன.

சீனாவின் தகிடுதத்தங்களுக்கு எதிராக உலகம் விழித்துக் கொண்டு விட்டது. இந்தியாவுக்கு எதிராக 60,000 வீரர்களை எல்லையில் நிறுத்தியுள்ளது, கரோனா பரவலுக்கு சீனாதான்பொறுப்பு என்று ஆஸ்திரேலியா கூறியதையடுத்து அந்த நாட்டை சீனா அச்சுறுத்தி வருகிறது.

நமக்குத் தேவை கூட்டாளிகள், நண்பர்கள். சீனாவை இத்தனை ஆண்டுகளாக திருப்தி படுத்த முயற்சி செய்ததினால்தான் அவர்களின் மோசமான நடத்தை அதிகரித்துள்ளது. ஆனால் இனி நடக்காது, அவர்களை எதிர்கொள்வோம் அவர்கள் இதற்கு விலை கொடுத்தாக வேண்டும்” என்று 3 நேர்காணல்களில் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x