Last Updated : 09 Oct, 2020 04:14 PM

 

Published : 09 Oct 2020 04:14 PM
Last Updated : 09 Oct 2020 04:14 PM

பட்டினியை ஒழிக்கப் போராடிய உலக உணவுத் திட்டத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

உலக உணவுத் திட்டம் : படம் உதவி ட்விட்டர்

ஓஸ்லோ


2020ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஐ.நாவின் உலக உணவுத் திட்டத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டினியை எதிர்த்துப் போராடியதற்காகவும், போர், உள்நாட்டுப் போர் நடக்கும் இடங்களில் அமைதியான சூழல் நிலவ அளித்த பங்களிப்பு, போர், பிரச்சினைக்குரிய இடங்களில் பட்டினியை ஆயுதமாக பயன்படுத்துவதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொண்டதால் இந்த அமைதிக்கான நோபல்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் உள்ள ஓஸ்லோ நகரில்அறிவிக்கப்படும்.

அந்தவகையில் நார்வே நோபல் குழுவினர் அமைதிக்கான நோபல் பரிசை இன்று அறிவித்தனர். இதன்படி, ஐ.நாவால் கடந்த 1963-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மனித நேய சேவைகளைச் செய்யும் உலக உணவுத் திட்டத்துக்கு 2020ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டினியை எதிர்த்துப் போராடியதற்காகவும், போர், உள்நாட்டுப் போர் நடக்கும் இடங்களில் அமைதியான சூழல் நிலவ அளித்த பங்களிப்பு, போர், பிரச்சினைக்குரிய இடங்களில் பட்டினியை ஆயுதமாக பயன்படுத்துவதைத் தடுக்க 58 ஆண்டுகள் அயராத முயற்சிகள் மேற்கொண்டதால் இந்த அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டில் மட்டும் உலக உணவுத் திட்டம் பட்டினியால் வாடிய 88 நாடுகளைச் சேர்ந்த 10 கோடி மக்களுக்கு உணவு வழங்கி பசியாற்றி, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. உலகளவில் பட்டினியை ஒழிப்பது என்பது ஐ.நாவின் நிலையான வளர்ச்சி இலக்காக கடந்த 2015-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.

கரோனா வைரஸின் பாதிப்பால் உலகளவில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக யேமன், காங்கோ ஜனநாயகக் குடியரசு, நைஜீரியா, தெற்கு சூடான், புர்கினபாசோ ஆகிய நாடுகளில் பசியோடு சேர்ந்து உள்நாட்டுப் போர் வன்முறையும் சேர்ந்து கொண்டது. இந்த காலகட்டத்தில் கரோானாவாலும் மக்கள் பாதிக்கப்பட்டதால், ஏராளமான மக்கள் பட்டினி நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்த பெருந்தொற்று காலத்தில் உலக உணவுத் திட்டம் தன்னுடைய முயற்சிகளைத் தீவிரப்படுத்தி, பட்டினியை போக்க முயன்றது. மருத்துவரீதியான தடுப்பூசி எங்களிடம் இருக்கும் நாள் வரை, குழப்பத்துக்கு சிறந்த தடுப்புமருந்து உணவுதான் என்று உலக உணவுத்திட்டம் குறிப்பிட்டிருந்தது.

கடந்த 1963-ம்ஆண்டு ஐநாவால் தொடங்கப்பட்ட உலக உணவுத் திட்டம் சோதனை முயற்சியில் மூன்று ஆண்டுகள் நடத்தப்பட்டு 1965-ம் ஆண்டு முதல் முழுமையாகச் செயல்படத் தொடங்கியது. இந்த உலக உணவுத் திட்டத்துக்கு பல்வேறு நாடுகளின் அரசுகளின் பங்களிப்பும், தனிநபர்கள், நிறுவனங்களும் நன்கொடை அளித்து பங்களிப்பு செய்கின்றன.

சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 93 நாடுகளைச் சேர்ந்த 9.3 கோடி மக்களுக்கு உணவு வழங்கும் பணியை உலக உணவுத் திட்டம் செய்து வருகிறது. இந்த உலக உணவுத் திட்டத்தின் தலைமை அலுவலகம் ரோம் நகரிலும், அலுவலகங்கள் உலகளவில் 80 நாடுகளிலும் செயல்படுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x