

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடல்நிலை குறித்து உண்மையான தகவல்கள் எதுவும் மக்களுக்குத் தெரியாத நிலையில், 25-வது சட்டத் திருத்தத்தைச் செயல்படுத்துவதைப் பரிசீலிக்க வேண்டும் என்று பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்ஸி பெலோசி வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் 25-வது சட்டத் திருத்தத்தைச் செயல்படுத்தக் கோரி நான்ஸி பெலோசி வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரின் மனைவி மெலானியா ட்ரம்ப் இருவரும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் ராணுவ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற அதிபர் ட்ரம்ப் இரு நாட்களுக்கு முன் மாளிகைக்குத் திரும்பினார்.
ஆனால், அதிபர் ட்ரம்ப் கரோனாவிலிருந்து குணமடைந்துவிட்டாரா, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை எப்போது முடியும் என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை.
இந்நிலையில் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவருமான நான்ஸி பெலோசி, அதிபர் ட்ரம்ப் உடல்நிலை குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது உடல்நிலை குறித்த பல்வேறு தகவல்களை இன்னும் வெளிப்படையாக மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது அவசியம். அதிபருக்கு என்ன நடந்தது, அவரின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்ள மக்களுக்கு உரிமை உண்டு.
ஆனால், வெள்ளை மாளிகையில் பலர் கரோனாவில் பாதிக்கப்பட்ட நிலையில் இன்னும் முழுமையான தகவல்கள் எதுவும் இல்லை. இதுகுறித்து விசாரிக்க ஒரு மசோதாவைத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளேன்” எனத் தெரிவித்தார்.
சபாநாயகர் நான்ஸி பெலோசியின் பேட்டி குறித்த அறிந்த சிறிது நேரத்தில் அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் பதில் அளித்தார். அதில், “மனநலம் பாதித்த நான்ஸிதான் தற்போது தனிமைப்படுத்தப்பட வேண்டும். யாரும் நான்ஸியை மனநிலை சரியில்லாதவர் என்று அழைக்காதீர்கள்” எனக் கிண்டல் செய்தார்.
இதுவரை கரோனா வைரஸால் அமெரிக்காவில் 2.10 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கில் பாதிக்கப்பட்ட நிலையில் அடுத்துவரும் கடும் குளிர்காலத்தில் கரோனா பரவும் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவ வல்லுநர்கள், விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
இதனால், 25-வது சட்டத் திருத்தத்தைச் செயல்படுத்துவது குறித்து நான்ஸி பெலோசி உள்ளிட்ட எம்.பி.க்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
25-வது சட்டத்திருத்தம் என்றால் என்ன?
அமெரிக்காவில் 25-வது சட்டத் திருத்தம் என்பது கடந்த 1967-ம் ஆண்டு அதிபர் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்ட பின் கொண்டுவரப்பட்டது. இதன்படி அதிபர் செயல்படாத சூழலில் இருக்கும்போது, அதாவது நோயால் பாதிக்கப்படுதல், உயிரிழப்பு, சிகிச்சையில் நீண்டநாள் இருத்தல் போன்றவற்றின்போது , அதிபர் தன்னுடைய அலுவலகப் பணிகளைக் கவனிக்க முடியாத சூழல் ஏற்பட்டால், அடுத்த இடத்தில் இருக்கும் துணை அதிபரிடம் பொறுப்பை ஒப்படைத்து பணிகளைக் கவனிக்க உத்தரவிட வேண்டும்.
ஒருவேளை துணை அதிபரும் இல்லாத சூழலில், அல்லது அவரும் நோயால் பாதிக்கப்பட்டால், உயிரிழக்க நேர்ந்தால், இரு அவைகளிலும் மூத்த உறுப்பினர்கள், பெரும்பான்மை உள்ளவருக்கு அந்தப் பொறுப்பை அதிபர் வழங்கலாம். அந்தவகையில் அதிபர் ட்ரம்ப், தனது பொறுப்புகளைத் துணை அதிபர் மைக் பென்ஸுக்கு வழங்கலாம். மூத்த உறுப்பினர் எனும் வகையில் நான்ஸி பெலோசிக்கு வழங்க முடியும்.