Published : 09 Oct 2020 07:07 AM
Last Updated : 09 Oct 2020 07:07 AM

அமெரிக்க தேர்தல் களம்: சிரித்த முகத்தோடு மக்களை கவர்ந்த கமலா

அமெரிக்க தேர்தல் வரலாற்றில் துணை அதிபர் வேட்பாளர்களுக்கிடையே நடைபெற்ற விவாதங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டதில்லை. யூட்டா மாகாணத்தின் தலைநகரான சால்ட் லேக் சிட்டி நகரில் நேற்று நடைபெற்ற மைக் பென்ஸ் - கமலா ஹாரிஸ் விவாதத்தில் அமெரிக்கர்கள் அதிக ஆர்வம் காட்டியதற்குப் பல காரணங்கள் உள்ளன.

எழுபத்தேழு வயதாகும் ஜோ பைடன் வெற்றி பெற்றால் அதிபர் தேர்தலில் முதன்முறையாக வெற்றி பெற்ற மிக மூத்த வேட்பாளர் என்றும், எழுபது நான்கு வயதாகும் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றால் அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற மிக மூத்த வேட்பாளர் என்றும் சரித்திரம் படைக்கப் போகிறார்கள். இவர்களின் வயது காரணமாக துணை அதிபர் வேட்பாளர்களின் மீது சற்று கவனம் கூடியுள்ளது. பென்ஸுக்கு 61 வயது. கமலாவுக்கு 55 வயது.

ட்ரம்பிடமிருந்து அமெரிக்காவை மீட்டு அடுத்த தலைமுறைக்கு கொடுக்கும் இடை நிலை அதிபராகவே நான் போட்டியிடுகிறேன் என பைடன் கூறி வருவதால், தனக்கு வாரிசாக பைடன் முடிவு செய்துள்ள கமலாவைப் பற்றி மேலும் அறிய அமெரிக்கர்களுக்கு இந்த விவாதம் ஓர் அரிய வாய்ப்பாக அமைந்தது.

ட்ரம்புக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால் ஜோ பைடனுடன் அடுத்த வாரம் நடக்க வேண்டிய விவாதம் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே நவம்பர் 3 தேர்தலுக்கு முன்பு நேற்று நடைபெற்ற துணை அதிபர் விவாதமே கடைசி முக்கிய நிகழ்வாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ட்ரம்பின் கோபம், குறுக்கீடுகள், பதிலுக்கு பைடனின் வசைகள் என சென்ற வார அதிபர் வேட்பாளர்கள் விவாதத்தில் பெரும் ஏமாற்றமடைந்த அமெரிக்கர்கள், துணை அதிபர் வேட்பாளர்கள் விவாதத்தில் அதிக ஆர்வம் காட்டினர். முதன் முறையாக துணை அதிபர் விவாதத்தில் வெள்ளையர் அல்லாத பெண் பங்கு பெறுவதும் விவாதத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியது.

“தேர்தலுக்கு முன்பு கரோனா தொற்றுக்கு தடுப்பூசி வந்துவிட்டால் நீங்கள் அதை போட்டுக் கொள்வீர்களா?” என்று கேள்விக்கு “மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைத்தால் போட்டுக் கொள்வேன், ட்ரம்ப் பரிந்துரைத்தால் போட்டுக்கொள்ள மாட்டேன்” என உடனே பதில் அளித்தார் கமலா.

ஜனநாயக கட்சியின் உள் கட்சி அதிபர் வேட்பாளர் தேர்தலில் பைடனை கடுமையாக தாக்கியும், உச்ச நீதிமன்ற நீதிபதி பிரட் கேவநாவ் நியமனத்தில் அவரைத் தாக்கியும் “பாயும் புலி” எனப் பெயர் பெற்ற போராளி கமலாவை இந்த விவாதத்தில் காணவில்லை. சிரித்த முகத்தோடு, நிலையான, சீரான, அமைதியான விவாதத்தில் அவர் ஈடுபட்டதற்கு காரணம் கருத்துக் கணிப்புகளில் அவரது கட்சி கணிசமான முன்னிலையில் இருப்பதே ஆகும்.

பென்ஸ் குறுக்கிட்டபோதெல்லாம் “துணை அதிபர் அவர்களே, நான் இன்னும் பேசிக்கொண்டிருக்கிறேன்” என கமலா தன்னை நிலை நாட்டிக்கொண்டது பெண் வாக்காளர்களிடையே அவருக்குக் கிடைத்த வெற்றியாகும்.

வாழ்வில் தன் உயர்வுக்கு சென்னையில் பிறந்து வளர்ந்த தன்னுடைய அம்மா ஷ்யாமளா கோபாலனே காரணம் என முழங்கி வரும் கமலா “இந்த மேடையில் நான் இருப்பதை என் அம்மா பார்த்தால் மிகவும் பெருமை அடைவார்” என நன்றி உணர்வோடு அம்மாவை நினைவு கூர்ந்தார்.

பைடன்- கமலா ஹாரிஸ் அணி வென்றால் அமெரிக்கர்கள் அதிக வரி கட்ட வேண்டிய நிலை கண்டிப்பாக வரும் என்றும் பைடன் அமெரிக்காவை சீனாவிடம் சரணடையச் செய்து விடுவார் எனவும் பென்ஸ் கூறி தன் கட்சியினரை மகிழ்வித்து, இன்னும் யாருக்கு ஓட்டு போடுவது என முடிவு செய்யாத வாக்காளர்களைத் தந்திரமாக குறி வைத்தார்.

“நம்முடைய நட்பு நாடுகளெல்லாம் ட்ரம்பை விட சீன அதிபர் மீது கூடுதல் மரியாதையும் நம்பிக்கையும் வைத்துள்ளனர், அதிபர் ட்ரம்ப் சீனாவைக் கையாண்ட விதத்தால் அமெரிக்கர்கள் வேலைகளையும், உயிர்களையும் இழந்துள்ளனர்”, என பதிலடி கொடுத்தார் கமலா.

நடுவர் சூசன் பேஜ் கேட்ட கேள்விகள் அனைத்திலும் பலரையும் கவர்ந்த கேள்வியை அவருக்கு கொடுத்தது எட்டாம் வகுப்பு மாணவி பிரெக்லின் ப்ரவுன். “நான் தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்க்கும் போதெல்லாம் அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் வாதிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். தலைவர்களிடையே ஒற்றுமை இல்லையென்றால் பொது மக்களிடம் எப்படி ஒற்றுமை இருக்கும்?” என்பதே அச்சிறுமியின் கேள்வி.

தொலைக்காட்சியில் பார்ப்பதையெல்லாம் நம்ப வேண்டாம் என்றும், அமெரிக்கர்களிடையே அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நாடு என்று வரும்போது ஒன்றாகிவிடுவோம் என்றும் அந்த மாணவிக்கு பதிலளித்தார் பென்ஸ். “அனைவரையும் அரவணைக்கும் பைடனின் ஆளுமைத் திறனும், பிரெக்லின் போன்ற இளையோரின் தலைமைப் பண்பாலும் அமெரிக்காவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது” என உறுதி அளித்தார் கமலா.

கடந்த பல மாதங்களாக அதிர்ச்சி அடிகளை வாங்கி வரும் ட்ரம்பின் சுமையை பென்ஸ் சற்று குறைத்துள்ளார் என்பது அவர் கட்சிக்கு கிடைத்த வெற்றி. தன் கட்சியின் தற்போதைய முன்னணி நிலைக்கு களங்கம் ஏதும் ஏற்படுத்தாமல் சிரித்த முகத்தோடு கமலா விவாதத்தை முடித்தது பைடனுக்கு கிடைத்த வெற்றி. அடுத்த நான்கு வாரங்களில் தெரியும் உண்மையான வெற்றி யாருக்கென்று!

கட்டுரையாளர் : 35 ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்கிற சோமலெ சோமசுந்தரம் அங்கு வேளாண்மையில் முனைவர் பட்டம் பெற்றவர். அமெரிக்கா தொடர்பான கட்டுரைகளை தமிழ் ஊடகங்களுக்கு வாரந்தோறும் எழுதி வருபவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x