

மத நல்லிணக்கம் சார்ந்த அமெரிக்க அரசின் ஆலோசனைக் குழுவில் 3 இந்திய வம்சாவளியினரை அமெரிக்க அதிபர் ஒபாமா நியமித்துள்ளார்.
பிரீத்தி பன்சால், நிபுன் மெஹ்தா, ஜஸ்ஜீத் சிங் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினர் உட்பட மொத்தம் 14 பேர் இந்த நியமனத்தைப் பெற்றுள்ளனர்.
இவர்களில் பிரீத்தி பன்சால் மசாஸ்ச்சட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர வேறு சில சமூக நல அமைப்புகளிலும் முக்கியப் பொறுப்புகளில் உள்ளார்.
சாஃப்ட்வேர் இன்ஜினியரான நிபுன் மெஹ்தா, சர்வீஸ் ஸ்பேஸ் என்ற பெயரில் அரசு சாரா தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
ஜஸ்ஜித் சிங் அமெரிக்கா வாழ் சீக்கியர்களுக்கான சட்ட பாதுகாப்பு மற்றும் கல்வி உதவி அமைப்பின் செயல் இயக்குநராக உள்ளார். அரசின் மத நல்லிணக்க ஆலோசனை குழுவில் இவர்களை நியமித்தது தொடர்பாக பேசிய ஒபாமா, பல்வேறு துறைகளில் சிறப்பாக பங்களித்து வந்துள்ள இவர்கள், புதிய பொறுப்பில் அமெரிக்க மக்களுக்காக திறம்பட பணியாற்றுவார்கள் என்று கூறியுள்ளார்.