

சீனாவும், ஐக்கிய அமீரகமும் இணைந்து நடத்தும் கரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்டப் பரிசோதனை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஐக்கிய அமீரகம் அதிகாரிகள் தரப்பில், “சீனாவுடன் இணைந்து நடந்தும் கரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்டப் பரிசோதனை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சுமார் 31,000க்கும் அதிகமானவர்களுக்குத் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. ஐக்கிய அமீரகம், ஜோர்டான், எகிப்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
இதன் முடிவுகள் பாதுகாப்பானதாகவே உள்ளன. எதிர்ப்பு சக்திகளை உருவாக்கக்கூடிய தன்மை தடுப்பு மருந்தில் உள்ளது. ஆனால், இறுதி முடிவு காலத்திடம் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடத்தில் சுமார் 75 மில்லியன் முதல் 100 மில்லியன் வரை கரோனா தடுப்பு மருந்துகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம் என்று ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அமீரகத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 435 பேர் பலியாகி உள்ளனர்.
கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ், உலக நாடுகளின் செயல்பாட்டைக் கடுமையாக முடக்கியுள்ளது.
இந்த நிலையில் பல்வேறு நாடுகள் கரோனாவுக்குத் தடுப்பூசி மருந்து கண்டறியும் சோதனையில் இறங்கியுள்ளன. அந்த வகையில் சீனாவின் மருந்து நிறுவனமான சினோபார்முடன் இணைந்து ஐக்கிய அரபு அமீரகம் கரோனாவுக்கு மருந்து கண்டறியும் சோதனையில் ஈடுபட்டுள்ளது.