Last Updated : 08 Oct, 2020 06:43 PM

 

Published : 08 Oct 2020 06:43 PM
Last Updated : 08 Oct 2020 06:43 PM

அமெரிக்கப் பெண் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

அமெரிக்கப் பெண் கவிஞர் லூயி க்ளுக்.

ஸ்டாக்ஹோம்

2020 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்கப் பெண் கவிஞர் லூயி க்ளூக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும் மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும்.

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள கரோனலின்ஸ்கா இன்ஸ்டிட்யூட்டில் உள்ள 7 பேர் கொண்ட நோபல் பரிசுக் குழு இலக்கியத்துக்கான நோபல் விருதை இன்று அறிவித்தது.

அமெரிக்காவின் மிகப் புகழ்வாய்ந்த சமகால இலக்கியத்தில் முக்கியமானவராகக் கருதப்படும் லூயி க்ளுக் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார்.

நோபல் பரிசுக் கமிட்டி கூறுகையில், “தெளிவான, எளிமையான, அழகான கவிதையின் மூலம் இந்தப் பிரபஞ்சத்தில் தனது இருப்பை லூயி வெளிப்படுத்தியுள்ளார். பழங்காலப் புராணங்கள், பழமையான கருப்பொருளை உத்வேகமாக எடுத்துக்கொண்டு, தனது பெரும்பாலான படைப்புகளில் அதை லூயி வெளிப்படுத்தியுள்ளார்.

லூயி க்ளுக்

குழந்தைப் பருவம், குடும்ப வாழ்க்கை, பெற்றோர், நண்பர்களுடன் நெருங்கிய உறவுகள் போன்றவை லூயிக்கு மையமாக இருந்த கருப்பொருளாக இருந்தது” எனத் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1943-ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்த லூயி, தற்போது யேழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 1968-ம் ஆண்டு முதன்முதலில் ஃபர்ஸ்ட் பார்ன் எனும் கவிதையை எழுதினார். அதன்பின் அமெரிக்காவில் மிக விரைவில் புகழ்பெற்ற கவிஞராகவும், சமகால இலக்கியத்தில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளராகவும் லூயி மாறினார்.

லூயி இதற்குமுன் பெருமை மிகு புலிட்சர் விருதை கடந்த 1993-ம் ஆண்டும், 2014-ம் ஆண்டு தேசிய புத்தக விருதையும் பெற்றார். இதுவரை லூயி க்ளுக் கவிதை மற்றும் பல கட்டுரைகள் அடங்கிய 12 தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

ஃப்ர்ஸ்ட் பார்ன், தி ஹவுஸ் ஆஃப் மார்ஸ்லாண்ட், தி கார்டன், டிசென்டிங் ஃபிகர், தி டிரம்ப் ஆப் அச்சிலிஸ் உள்ளிட்டவை லூயி க்ளூக்கின் புகழ்பெற்ற படைப்பாகும். கடைசியாக 2017-ம் ஆண்டு அமெரிக்கன் ஒரிஜினாலிட்டி எனும் கட்டுரைத் தொகுப்பை லூயி வெளியிட்டிருந்தார்.

பல்வேறு சர்ச்சைகள் காரணமாக கடந்த 2018, 2019-ம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல்பரிசு அறிவிக்கப்படாத நிலையில் இந்த முறை அறிவிக்கப்பட்டுள்ளது. கவிஞர் லூயி க்ளூக்கிற்கு 10 மில்லியன் ஸ்வீடன் டாலர் அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x