

விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது மனித உரிமை மீறல்கள் நடந்தது குறித்து, இலங்கை அரசு உள்நாட்டு விசாரணை மேற்கொள்ள ஆதரவு அளிப்போம் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையில் 26 ஆண்டுகளுக்கு மேலாக மோதல் நடைபெற்றது. கடந்த 2009-ம் ஆண்டு இறுதிக்கட்ட போர் நடந்தது. அப்போது 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமான தமிழ் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர். இதையடுத்து கடந்த 2002 முதல் 2011 வரையில் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்து வந்தன.
இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் கூட்டத் தொடர் கடந்த 14-ம் தேதி தொடங் கியது. ஏற்கெனவே அறிவித்தபடி, இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் ஜெய்ட் ராட் அல் உசேன் சமர்ப்பித்தார்.
அதில், ‘‘இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக் கட்ட போரின்போதும், போர் முடிந்த பிறகும் பல வகைகளில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. 2009 முதல் 2011-ம் ஆண்டு வரை அங்கு மனித உரிமை மீறல்கள் நடந் துள்ளன. இதில் புலிகள், ராணுவம் என இருதரப்பினருமே மனித உரிமை களை மீறியுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்த பன்னாட்டு நீதிபதிகள் கொண்ட சர்வதேச நீதிமன்றம் அமைக்க வேண்டும்’’ என்று பரிந்துரை செய்திருந்தது.
இதற்கு இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், போர்க் குற்றங்கள் பற்றி உள்நாட்டிலேயே சுதந்திரமான அமைப்பு விசாரணை நடத்தும் என்று இலங்கை அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அதற்காக உலக நாடுகளிடம் ஆதரவை திரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசு உள்நாட்டு விசாரணை நடத்துவதற்கு ஆதரவு அளிப்போம் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இத்தகவலை இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவிடம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி கூறியுள்ளார்.
ஐ.நா. பொதுச் சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்க இலங்கை அதிபர் சிறிசேனா வந்துள்ளார். அவரை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி சந்தித்து பேசினார். அப்போது இலங்கைக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பது பற்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, நியூயார்க்கில் நேற்று கூறியதாவது:
இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தவும், பாதிப்புகளை சரி செய்யவும் புதிய அரசு எடுத்து வரும் துணிச்சலான நடவடிக்கைகளை அமைச்சர் ஜான் கெர்ரி பாராட்டினார். மேலும் ஐ.நா. மற்றும் உலக நாடுகளுடனான உறவை புதுப்பித்துக் கொள்ள தற்போது பொறுப்பேற்றுள்ள இலங்கை அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளையும் ஜான் கெர்ரி வரவேற்றார். இலங்கையில் நீதி மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்ய தயாராக இருப்பது குறித்தும் சிறிசேனாவிடம் ஜான் கெர்ரி எடுத்துரைத்தார். மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் ஆதரவுடன் உள்நாட்டு விசாரணையை இலங்கை அரசு நடத்த அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று கூறியுள்ளார்.
இவ்வாறு ஜான் கிர்பி கூறினார்.
இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து அந்த நாட்டுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்காதான் முதலில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியது. ஆனால் ஜெனீவா வில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்கா கடந்த வாரம் ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. அதில், ‘‘இலங்கையின் அதிகாரத்துக்கு உட்பட்டு வெளிநாட்டினர் இடம்பெறும் விசாரணைக் குழுவை இலங்கை அரசு ஏற்படுத்த வேண்டும்’’ என்று கூறியிருந்தது.
ஆனால், இது ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலைவர் ஜெய்ட் ராட் அல் உசேன் அளித்த போர்க் குற்ற அறிக்கைக்கு (சர்வதேச நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற பரிந்துரை) எதிராக இருந்தது. அமெரிக்கா சமர்ப்பித்துள்ள இந்த தீர்மானத்தின் மீது அடுத்த வாரம் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் ஓட்டெடுப்பு நடக்க உள்ளது. இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த அமெரிக்கா திடீரென ஆதரவு நிலையை எடுத்துள்ளதால் சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் 2012, 2013-ம் ஆண்டுகளில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. 2014-ம் ஆண்டு கொண்டுவந்த தீர்மானத்தின் மீது நடந்த ஓட்டெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.