

சிரியாவில் துருக்கி கட்டுப்பாட்டுப் பகுதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 14 பேர் பலியாகினர்.
இதுகுறித்து லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் சிரிய போர் கண்காணிப்புக் குழு கூறும்போது, “சிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கி கட்டுப்பாட்டுப் பகுதியான அல் பாப் பகுதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 14 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். பேருந்து நிலையத்துக்கு அருகே இந்த விபத்து நடந்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இந்தத் தாக்குதலில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
முன்னதாக, கடந்த ஆண்டு துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக சிரியாவின் வடக்குப் பகுதி துருக்கி கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறினர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்.
சிரியா மீதான தாக்குதல் காரணமாக துருக்கி மீதான விமர்சனத்தை உலக நாடுகள் முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.