Published : 06 Oct 2020 07:01 AM
Last Updated : 06 Oct 2020 07:01 AM

ஆஸ்திரேலியாவில் 3,000 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் வந்த ‘டாஸ்மேனியன் டெவில்’ விலங்கு

ஆஸ்திரேலியாவில் அழிவின் விளிம்பில் இருந்த ‘டாஸ்மேனியன் டெவில்’ என்ற விலங்கு, இனப்பெருக்கம் செய்யப்பட்டு மீண்டும் தேசிய பூங்காவுக்குள் அவிழ்த்து விடப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு என்று பலரும் பாராட்டி உள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு கங்காரு. பாலூட்டி இனங்களில் வயிற்றில் பை உள்ள இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு இது. அதேபோன்ற ஒரு விலங்குதான் ‘டாஸ்மேனியன் டெவில்’. ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா பகுதியில் மட்டும் காணப்பட்டதால், இதற்கு டாஸ்மேனியன் டெவில் என்று பெயரிட்டுள்ளனர்.

கரியநிறமும், கூரிய பற்களும், இறந்த உடல்களை தின்னும் வழக்கமும் உள்ளது. பயம் ஏற்படும் அளவுக்கு டாஸ்மேனியன் டெவில் அலறும். அதனால் இதற்கு ‘டெவில்’ என்று பெயர் வைத்துள்ளனர். ஆனால், வளைகளில் வாழும் இந்த விலங்கு, இறந்த உடல்களை திண்பதன் மூலம், சுற்றுச்சூழலை மிகவும் பாதுகாத்து வந்தது.

இந்த விலங்கு ஆஸ்திரேலியாவில் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு அதிக எண்ணிக்கயைில் இருந்துள்ளது. ஆனால், படிப்படியாக இதன் எண்ணிக்கை குறைந்து, ஒன்றரை லட்சம் அளவுக்கு வந்துவிட்டது. மேலும், 1990-ம் ஆண்டுகளில் அரிய வகை முகப் புற்றுநோய் இந்த விலங்குகளை தாக்கியதில், அழிவின் விளிம்பு நிலைக்கு சென்றன. இந்த விலங்கின் முகத்தில் பெரிய கட்டிகள் வந்து இறந்துள்ளன.

இந்நிலையில், டாஸ்மேனியன் டெவில் விலங்கை பாதுகாக்கவும், அதிகரிக்கவும், ‘ஆஸி ஆர்க்’ என்ற அமைப்பு திட்டத்தை கையில் எடுத்தது. அதன்படி, இந்த அமைப்பு மற்ற வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து டாஸ்மேனியன் டெவில் விலங்குகளை இனப்பெருக்கம் செய்து வந்தது. அதன் ஒரு கட்டமாக 26 டாஸ்மேனியன் டெவில் விலங்குகள் ஆஸ்திரேலிய தேசிய பூங்காவில் அவிழ்த்துவிடப்பட்டன. ஆஸ்திரேலியாவின் பேரிங்டன் டாப் பகுதியில் 400 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட சரணாலயத்தில் இந்த விலங்குகள் விடப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஆஸி ஆர்க் அமைப்பின் தலைவர் டிம் பால்க்னர் கூறும்போது, ‘‘இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு’’ என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

அரசு சுற்றுச்சூழல் அதிகாரிகள் கூறும்போது, ‘‘டாஸ்மேனியன் டெவில் விலங்கின் எடை 8 கிலோ வரை இருக்கும். இது மனிதர்களுக்கு ஆபத்தானது அல்ல. தற்போது 25 ஆயிரம் டெவில் விலங்குகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x