

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ராணுவ மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ட்ரம்ப் நலம்பெற வேண்டி அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனை வெளியே இரவு பகலாக பிரார்த்தனையைத் தொடங்கியுள்ளனர்.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அதிபர் ட்ரம்ப், அவரின் மனைவி மெலானியா ட்ரம்ப் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால் அதிபர் ட்ரம்ப்புக்கு காய்ச்சல் தொடர்ந்து அதிகரிக்கவே வால்டர்ரீடில் உள்ள ராணுவ மருத்துவ மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ராணுவ மருத்துவ மையத்துக்குச் சென்றபின் நலமாக இருப்பதாகவும், உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் அதிபர் ட்ரம்ப் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரம் கரோனாவுக்கு எதிராக ட்ரம்ப் எவ்வாறு போரிடப்போகிறார் என்பது மிகவும் முக்கியமானது, கவனிக்கத்தக்கது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் ராணுவ மருத்துவமனை வெளியே ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் ட்ரம்ப் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனையைத் தொடங்கியுள்ளனர். கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அமெரிக்காவின் பல இடங்களில் பேரணியையும் ட்ரம்ப் ஆதரவாளர்கள் தொடர்ந்துள்ளனர்.
மேலும், இவ்வருட இறுதியில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஆதரவாகவும் குரல்களை எழுப்பி வருகின்றனர்.
அமெரிக்காவில் கரோனா வைரஸுக்கு 74 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2,10,000 பேர் பலியாகி உள்ளனர்.