Published : 05 Oct 2020 07:00 AM
Last Updated : 05 Oct 2020 07:00 AM

இந்திய - சீன உயரதிகாரிகள் 12-ம் தேதி 7-வது சுற்று பேச்சு

புதுடெல்லி

கடந்த மே மாதம் முதல் 5 மாதங்களாக லடாக் எல்லையில் போர்ப் பதற்றம் நீடிக்கிறது. பதற்றத்தை தணிக்க 5 அம்ச திட்டத்தை செயல்படுத்த இரு நாடுகளும் கடந்த மாதம் ஒப்புக் கொண்டன. இதன்படி இந்திய - சீன ராணுவ உயரதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

கடந்த 21-ம் தேதி இருதரப்பு ராணுவ உயரதிகாரிகளின் 6-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. வரும் 12-ம் தேதி 7-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. கடந்த பேச்சுவார்த்தையின்போது லே நகரை தலைமையிடமாகக் கொண்ட 14-வது பிடைப் பிரிவின் கமாண்டர் ஹரிந்தர் சிங் பங்கேற்றார். அவர் இந்த மாத மத்தியில் ஓய்வு பெறுகிறார். அவருக்கு அடுத்து லெப்டினென்ட் ஜெனரல் பிஜிகே மேனன், 14-வது படைப் பிரிவின் கமாண்டராக பதவியேற்க உள்ளார். வரும் 12-ம் தேதி நடக்கும் பேச்சுவார்த்தையில் ஹரிந்தர் சிங்கும், பிஜிகே மேனனும் பங்கேற்பார்கள் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் பயிற்சி

லடாக் எல்லைப் பகுதிகளில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீன வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மலைப்பகுதிகளில் போரிட அவர்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் பயிற்சி அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்களை சீன செய்தியாளர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

லடாக் எல்லையில் சீன ராணுவம் டி-15 என்ற டாங்கிகளை குவித்து வருகிறது. இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவம் டி-90, டி72 ரக டாங்கிகளை நிலைநிறுத்தியுள்ளது. ரஷ்ய கண்டுபிடிப்பான டி-90 டாங்கிகள் கடும் குளிர்காலத்திலும் போரிடும் திறன் கொண்டது. இந்திய ராணுவ டாங்கிகளை, சீன டாங்கிகளால் எதிர்கொள்ள முடியாது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x