

ராணுவ விமான உதிரி பாகங்கள் உட்பட ரூ.660 கோடி பெறுமான உபகரணங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்க ராணுவத் தலைமைச் செயலகமான பெண்டகன் ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்க ராணுவத்தின் சரக்குப் போக்குவரத்துக்குப் பயன்படும் சி.130ஜே என்ற விமானத்தின் உதிரி பாகங்கள், பழுதுபார்க்கும் சாதனஙள், தரை தளத்தில் பயன்படுத்தப்படும் சாதனங்கள், ஜிபிஎஸ் அமைப்பு உள்ளிட்ட உதிரி பாகங்களை அமெரிக்காவிடம் இந்தியா கோரியிருந்தது.
ஆய்வுக்கான உபகரணங்கள், மென்பொருள் தொழில்நுட்ப ஆவணங்கள், பணியாளர் பயிற்சி உபகரணங்கள் என ரூ.660 கோடி மதிப்பிலான சாதனங்களும் அமெரிக்காவிடமிருந்து இந்தியா கோரியிருந்தது.
இதனையடுத்து இந்த கோரிக்கையை ஏற்று விற்பனை செய்ய பெண்டகன் நேற்று ஒப்புதல் வழங்கியது.
இது தொடர்பாக பெண்டகன், அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய கடிதத்தில், “இந்தியாவுக்கான இந்த விற்பனை அமெரிக்க வெளியுறவு கொள்கை மற்றும் அமெரிக்க தேசியப் பாதுகாப்புக்கும் ஆதரவளிக்கக் கூடியது.
இந்தியாவின் ராணுவ பலத்தை அதிகரிக்கும். தெற்காசியப் பகுதி மற்றும் இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அரசியல் நிலைத்தன்மை, அமைதி, மற்றும் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவற்றுக்கு இந்த விற்பனை முக்கியமாக அமையும்” என்று கூறப்பட்டுள்ளது.