Published : 03 Oct 2020 07:13 AM
Last Updated : 03 Oct 2020 07:13 AM

அமெரிக்க அதிபர் தேர்தல் கண்ணோட்டம்: அதிபர் ட்ரம்ப் - ஜோ பிடன் கடும் விவாதம்- ஒருவரை ஒருவர் வசைமாரி பொழிந்ததால் அதிர்ச்சி

அமெரிக்கா ஆவலுடன் எதிர்பார்த்த அதிபர் தேர்தலுக்கான முதல் விவாதம் கடந்த 29-ம் தேதி முடிந்தது. யாருக்கு ஒட்டு போடுவது என்பதை 95 சதவிகித அமெரிக்கர்கள் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டதாக கருத்துக் கணிப்புகள் வெளிப்படுத்துவதில் வியப்பேதுமில்லை. முப்பத்து இரண்டு மாநிலங்களில் அஞ்சல் வழியான ஒட்டுப் பதிவுகள் தொடங்கி விட்டன. அப்படி இருந்தும் இந்த விவாதத்தின் மீது ஏன் இத்துணை ஆர்வம்?

அடுத்த அதிபர் யார் என்பதை முடிவு செய்யப் போவது அரிசோனா, புளோரிடா, மிச்சிகன், பென்சில்வேனியா போன்ற சில மாநிலங்களில் உள்ள 'மதில் மேல் பூனை' நிலையில் உள்ள வாக்காளர்களே. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி யாருக்கு என்பதை முடிவு செய்வது நாடு தழுவிய மொத்த ஓட்டுகள் அல்ல. கடந்த தேர்தலில் ஹிலாரி கிளின்டனை விட 28 லட்சம் ஓட்டுக்கள் குறைவாகப் பெற்றும் டிரம்ப் அதிபராகியதற்குக் காரணம் அந்த 'மதில் மேல் பூனை' மாநிலங்களுக்குள்ள தேர்தல் கல்லூரி (electoral college) ஓட்டுகளே. ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகையைப் பொறுத்து அமெரிக்காவின் 538 தேர்தல் கல்லூரி ஓட்டுகள் ஒதுக்கப்படுகின்றன. அதில், 270 ஓட்டுகளைப் பெறுபவரே அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் கடந்த 29-ம் தேதி நடந்த விவாதம் அமெரிக்க மக்களிடையே தற்போதுள்ள தேர்தல் கசப்புணர்வை அதிகமாகிவிட்டது. விவாதத்தின் தொடக்கத்தில் இருந்தே நடுவர் கிறிஸ் வாலஸ் உடன் டிரம்ப் அடிக்கடி குறுக்கிடவும், இரு வேட்பாளர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கவும், அமெரிக்க வரலாற்றில் இது ஒரு வருந்தத்தக்க நாள் என்ற உணர்வு விவாதத்தைப் பார்த்த பலரிடையே ஏற்பட்டு, எப்போது இது முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

மற்ற நாடுகளை விட அமெரிக்காவில் கரோனா தொற்றால் இறந்தோர் அதிகம் என ஜோ பிடன் கூறியதற்கு, "சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளின் கரோனா இறப்பு எண்ணிக்கை உண்மையானதல்ல" என்று டிரம்ப் கூறிய பதில் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் அவர் அடைந்த தோல்வியை மழுப்புவதாகவே இருந்தது.

எப்போதும் எதிராளியை காரசாரமாகத் தாக்குவதில் வல்லவரான டிரம்ப் ‘கல்லூரியில் நீங்கள் ஒரு மக்கான மாணவர்’ என்று ஜோ பிடனைத் தாக்க, ‘நீங்கள் ஒரு கோமாளி’, ‘இவர் ஒரு முட்டாள்’, ‘வாயை மூடுங்கள்’, ‘தொடர்ந்து பொய்கள் சொல்ல இன்னும் நான்கு வருடங்கள்’ என்று பலரும் எதிர்பாராத விதம் ஜோ பிடன் டிரம்ப்பைத் தாக்கியது டிரம்ப்புக்கு சற்று அதிர்ச்சியாகவே இருந்திருக்கும்.

கரோனா தொற்று தலைப்பில் விவாதம் ஏற்பட்ட போது சமூகத் தொலைவு, முகக் கவசம், அறிவியல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அமெரிக்கர்களை பலி கொடுத்தவர் டிரம்ப் என்று கடுமையாகச் சாடினார் ஜோ பிடன்.

கருப்பு இனத்தவர் தாக்கப்பட்டது தொடர்பான வன்முறைகள் அமெரிக்காவின் பல நகரங்களில் தொடர்வதைக் குறிப்பிட்டு, ‘‘ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்காவில் சட்டம் ஒழுங்கு இருக்காது’’ என்று டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்தார். மதில் மேல் பூனைகளாக உள்ள புறநகர்களில் வாழும் பெண் வாக்காளர்களை குறி வைத்து சொல்லப்பட்ட அந்த தேர்தல் தந்திரம், டிரம்புக்கு மிகவும் தேவையான புறநகர் மகளிர் ஓட்டுக்களைக் கொண்டு வருமா என்பது அடுத்த சில வாரங்களில் தெரியும்.

ஜோ பிடனை கடுமையாகத் தாக்கியதன் மூலமாகவும், உச்ச நீதிமன்றத்துக்கு தன்னுடைய குடியரசுக் கட்சியினர் விரும்புகின்ற நீதிபதி ஏமி பேரெட்டை பரிந்துரைத்ததனாலும், தன் ஆதரவாளர்களை உற்சாகத்தோடு வாக்களிக்கச் செய்யும் முயற்சியில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். ஜோ பிடன் ஆதரவாளர்களிடையே பிளவை ஏற்படுத்தி அவர்களை வாக்களிக்காமல் வீட்டில் இருக்கச் செய்யவும், புறநகர் மகளிரின் ஓட்டுகளைப் பெறுவதிலும் டிரம்பின் கவனம் அடுத்த சில வாரங்களில் அதிகம் செல்ல கூடும்.

விவாதம் நடைபெற்ற தொண்ணுாறு நிமிடங்களில் முழு முனைப்போடு ஜோ பிடன் இருந்ததால், ஜோ பிடனுக்கு வயதாகிவிட்டது, அவருக்கு அறிவாற்றல் திறன் குறைந்து விட்டது என்ற டிரம்பின் தாக்குதல்கள் இனி எடுபடாது. எஞ்சியுள்ள ஐந்தே வாரங்களில், வீட்டுக்குள் முடங்கி விடாமல் 'மதில் மேல் பூனை' மாநிலங்களில் வாக்காளர்களை நேரே சந்தித்து புறநகர் மகளிரைத் தம் பக்கம் ஈர்த்தால் ஜோ பிடனின் தற்போதைய முன்னணி நிலை உறுதியாகும்.

அமெரிக்க வல்லரசு கரோனா தொற்று, பொருளாதாரச் சரிவு, இனக் கலவரம், காட்டுத் தீ பரவுதல் போன்ற பல சவால்களை ஒரே நேரத்தில் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த போராட்டமான நேரத்தில் பொருள் பதிந்த விவாதத்தை ஆவலுடன் எதிர்பார்த்த அமெரிக்கர்களுக்கு இந்த முதல் விவாதம் பெரும் ஏமாற்றத்தோடு முடித்துள்ளது. அடுத்த வாரம் நடக்க உள்ள துணை அதிபர் வேட்பாளர்களுக்கான விவாதமும், அதற்குப் பிறகு நடை பெறவிருக்கிற அதிபர் வேட்பாளர்களுக்கான கடைசி 2 விவாதங்களும் அமெரிக்க ஜனநாயகத்தை மேலே தூக்கிவிட்டால் உலக ஜனநாயகத்துக்கு நல்லது.

கட்டுரையாளர் 35 ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்கிற சோமலெ சோமசுந்தரம், அங்கு வேளாண்மையில் முனைவர் பட்டம் பெற்றவர். தம் தந்தை ‘உலகம் சுற்றிய தமிழர்’ சோமலெவின் அடிச்சுவட்டில், தமிழில் கட்டுரைகளும் நூல்களும் எழுதி வருபவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x