

ஹெச்-1பி விசாவுக்கு விதிக்கப்பட்ட தடையை அமெரிக்க நீதிபதி நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
கலிபோர்னியா மாகாண வடக்கு பிரிவின் நீதிபதி ஜெப்ரி வைட் முன்னிலையில் வர்த்தக அமைச்சகம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு, அமெரிக்க தொழில் வர்த்தக சபை, தேசிய உற்பத்தியாளர் சங்கம், தேசிய சில்லரை வர்த்தக சம்மேளனம், டெக்நெட், தொழில்நுட்ப வர்த்தக குழுமம் மற்றும் இன்ட்ராக்ஸ் இன்கார்ப்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன.
ஹெச்-1பி விசாவுக்கு அதிபர் ட்ரம்ப் விதித்த தடை காரணமாக புதியவர்களை பணி நியமனம் செய்வது பெரும் சவாலாக உள்ளது. இதனால் உற்பத்தி பாதிக்கப்படும். மேலும் பொருளாதார மீட்சியை தடுக்கும், வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் என்று தேசிய உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஜூன் மாதம் ஹெச்-1பி விசா வழங்குவதற்கு தற்காலிக தடை விதிப்பது தொடர்பான உத்தரவை அதிபர் டொனால்டு ட்ரம்ப் பிறப்பித்தார். இந்த விசாவை பயன்படுத்தும் அமெரிக்க மற்றும் இந்திய நிறுவனங்கள் மற்றும் வேளாண் சார்ந்த பணிகளில் (ஹெச்-2பி) ஈடுபடும் பணியாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இதே போல ஜே விசா மற்றும் எல் விசா உள்ளிட்டவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டது.
அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வசதியாக விசா மீதான தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக பலர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இத்தகைய சூழலில் அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமின்றி அமெரிக்க நிறுவனங்களும் விசா மீதான தடை விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
இதேபோல உற்பத்தி நிறுவனங்களும் விசா கட்டுப்பாடு தங்களது தொழிலை வெகுவாக பாதித்திருப்பதாக தெரிவித்தன. கரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட இக்கட்டான நேரத்தில் இந்த தடை பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக தேசிய உற்பத்தியாளர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் லின்டா கெல்லி குறிப்பிட்டுள்ளார். தரமான தயாரிப்புகளை உற்பத்தி செய்ய திறமையானவர்கள் அவசியம். அதற்கு இந்த விசா தடை முட்டுக்கட்டையாக உள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார். பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்ட நீதிபதி, அதிபர் தனக்குள்ள அதிகார வரம்பை மீறி செயல்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு விசாவுக்கு விதித்த தடையை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டார்.