Published : 04 Sep 2015 11:15 AM
Last Updated : 04 Sep 2015 11:15 AM

உலக மசாலா: உடலையே மூடி மறைந்த ரோமம்!

ஆஸ்திரேலியாவில் வசித்த கான்பெர்ரா ஆடு, அளவுக்கு அதிகமான ரோமங்களால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தது. ஆட்டின் உடலே வெளியே தெரியாத அளவுக்கு, பார்வையையும் மறைத்தபடி வளர்ந்து கிடந்தன ரோமங்கள். ஆட்டின் காலில் இருந்து ரத்தம் வெளியேறி, இறக்கும் நிலைக்குச் சென்றுவிட்டது.

ஆடுக்கு உதவும் விதத்தில், ரோமங்களை வெட்டி எடுத்தனர். 40.5 கிலோ எடை இருந்தது ரோமம். உடலில் எடை குறைந்த உடன் ஆடு நிம்மதி அடைந்தது. சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவில் போட்டிகளில் பங்கேற்பதற்காக விவசாயிகள் ஆடுகளுக்கு முடிகளை வெட்டுவதில்லை. அது ஆடுகளின் உயிருக்கே ஆபத்தாக முடியும் அளவுக்குக் கொண்டு சென்றுவிட்டது.

ஐயோ… பாவம்…

தாய்லாந்தில் பழங்காலத்து பழக்கம் ஒன்று மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. பொம்மைகள் மூலம் குழந்தைகளின் ஆவிகளை வழிபடும் வழக்கம் வேகமாகப் பரவி வருகிறது. கருவிலேயே இறந்துபோகும் குழந்தைகளின் ஆவிகளை வழிபடும் முறை பழங்காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது. அது காலத்துக்கு ஏற்றவாறு மாறி, ஒருகட்டத்தில் மறைந்து போய்விட்டது. சமீபத்தில் மீண்டும் குழந்தை கடவுளை வணங்குவது அதிகரித்து வருகிறது. இதன் மூலம் அதிர்ஷ்டமும் செல்வமும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

பொம்மைகளையும் பொம்மைகளுக்கான அமைப்பையும் உருவாக்கிய மே நிங், ‘‘3 ஆண்டுகளுக்கு முன்பு என் மகன் மிகவும் பிடிவாதக்காரனாக இருந்தான். அவனை யாராலும் கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஒருநாள் நம்பிக்கையோடு கடவுள் பொம்மையை வாங்கி வந்தேன். உடனே என் மகனின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது.

விரைவில் மிக நல்ல குழந்தையாக மாறிப் போனான். மற்றவர்களுக்கும் பயன்படட்டும் என்றுதான் பொம்மைகளை உருவாக்கி, விற்பனை செய்து வருகிறேன். இங்குள்ள ஆயிரக்கணக்கான பொம்மைகள் தங்களின் தத்தெடுக்கப் போகும் பெற்றோருக்காகக் காத்திருக்கின்றன’’ என்கிறார். அவரவர் விருப்பத்துக்கு ஏற்றார் போல அளவு, எடை, அலங்காரம், ஆண், பெண் என்று பொம்மைகளைச் செய்து கொடுக்கிறார் மே நிங்.

ஏற்கெனவே சிரிப்பு புத்தர் எல்லோரையும் செல்வந்தராக மாற்றிவிட்டார்… நீங்க வேற...

ரஷ்யாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, நாய்களுக்குப் பிரத்யேக முகமூடிகளைத் தயாரித்திருக்கிறது. அன்பான, சாதுவான நாய்கள் முகமூடியை அணிந்தவுடன், ஆக்ரோஷமான, ரத்தம் வடியும் பற்களுடன் ஓநாய்களைப் போலக் காட்சியளிக்கின்றன. கோரமான முகமூடியுடன் இருக்கும் நாய்களை யாரும் திருடிச் சென்றுவிட மாட்டார்கள் என்கிறார் முதல் முகமூடியைப் பயன்படுத்திய மரினா குருல்யோவா. முகமூடி அணிவது நாய்களுக்கும் நல்லது, மற்றவர்களுக்கும் நல்லது. வித்தியாசமாக இருக்கட்டும் என்று இப்படி ஒரு முகமூடியைத் தயாரித்தோம். அது மிகப் பெரிய அளவுக்கு உலகம் முழுவதும் பரவிவிட்டது என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

வித்தியாசம் என்பதற்காக இப்படியா?

திருமணம் ஆன தம்பதியரில் மூன்றில் இரண்டு தம்பதியர் தங்கள் வருமானத்தைப் பற்றிப் பேசிக்கொள்வதில்லை. அதாவது தங்கள் இணையிடம், வருமானம் எவ்வளவு வருகிறது, சேமிப்பு எவ்வளவு, கடன் எவ்வளவு போன்ற நிதி தொடர்பான விஷயங்களைப் பரிமாறிக்கொள்வதில்லை என்று பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. திருமணத்துக்கு முன்பு நிதி தொடர்பாகப் பேசிக்கொண்டவர்கள் கூட, திருமணத்துக்குப் பின் பேசுவதில்லை.

பெண்களின் வருமானம் பற்றி பெரும்பாலும் ஆண்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். பெண்களுக்குத்தான் ஆண்களின் வருமானம் குறித்து சரியான தகவல்கள் கிடைப்பதில்லை. கடன் வாங்கும் நிறுவனங்களில் இருந்து வரும் தகவல்களை வைத்தே சிலர் கணவரின் வருமானத்தை அறிந்துகொள்கிறார்கள். அதிகமாகக் கடன் வாங்கி, அதைத் தங்கள் இணையிடம் பகிர்ந்துகொள்ளாதவர்களிடையே விவாகரத்து அதிகம் நடைபெறுகிறது என்கிறார்கள்.

எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்பவர்கள்தானே சரியான இணையாக இருக்க முடியும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x