

அமெரிக்காவில் மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 27 மாகாணங்களில் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது செப்டம்பர் மாதத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியில், “அமெரிக்காவில் மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 27 மாகாணங்களில் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது செப்டம்பர் மாதத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் 1.18 மில்லியன் மக்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஆகஸ்ட் மாதத்தில் 1.14 மில்லியன் மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 71 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸால் தற்போது உலகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.