

வெளிநாட்டினவருக்கான பயணக் கட்டுப்பாட்டில் சில தளர்வுகளை ஜப்பான் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஜப்பான் அரசு ஊடகம் தரப்பில், “கரோனா வைரஸ் காரணமாக சுமார் 159 நாடுகளுக்கு தடை விதித்திருந்தோம். இந்த நிலையில் வெளிநாட்டினவருக்கான பயணத்தில் சில தளர்வுகளைக் கொண்டுவர முடிவு செய்துள்ளோம். மருத்துவத் தேவைக்காவும், கல்விக்காவும், வணிக ரிதீயாகவும் வருபவர்களுக்குப் பயணத் தடையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்கண்ட தேவைகளுக்காக ஜப்பான் வருபவர்கள் இரண்டு வாரம் தனிமைப்படுத்துதலுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
ஜப்பானில் கரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தலைநகர் டோக்கியாவில் உள்ள நாடக அரங்கு ஒன்றில் நாடக உறுப்பினர் ஒருவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த நாடக அரங்கில் கலந்துகொண்ட பார்வையாளர்கள் அனைவரையும் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தும் முயற்சியில் ஜப்பான் அரசு இறங்கியது.
ஜப்பானில் 83,563 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 1,571 பேர் பலியாகியுள்ளனர்.
பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஜப்பானில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகம் இல்லையென்றாலும், தற்போது புதிதாகத் தொற்று ஏற்படத் தொடங்கியுள்ள நிலையில், ஜப்பான் அரசு தடுப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளது.