

கனடாவில் கரோனாவை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வரை பயணத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கனடா வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், ''கனடாவில் கரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக அக்டோபர் 31 ஆம் தேதி வரை வெளிநாட்டினவருக்குப் பயணத் தடை நீட்டிக்கப்படுகிறது. இதில் அமெரிக்காவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்காலிகப் பணியாளர்களுக்கு இதில் விலக்கு கொடுக்கப்படுகிறது''என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த கனடா தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அபராதமும், சிறைத் தண்டனையும் விதித்து வருகிறது.
கனடாவில் இதுவரை 1,58,758 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,34,971 பேர் குணமடைந்துள்ளனர். 9,297 பேர் பலியாகி உள்ளனர்.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 3 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
ஆனால், கரோனா ஊரடங்கால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.