

சவுதி அரேபியாவில் ஹஜ் யாத்திரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
சவுதியின் மெக்கா நகருக்கு புனிதப் பயணம் மேற்கொண்ட ஹஜ் யாத்திரீகர்கள், முக்கிய நிகழ்ச்சியான சாத்தான் மீது கல்லெறிதல் நிகழ்ச்சிக்காக மினா நகருக்கு வியாழக்கிழமை சென்றனர்.
அப்போது ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் திரண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 769 பேர்இறந்தனர். இதில் இந்தியர்கள் 22 பேர் இறந்தனர்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் (1), உத்தரப்பிரதேசம் (1), கேரளா (5) ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 7 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சவுதி அதிகாரிகள் நேற்று தெரிவித் தனர்.
இதைத் தொடர்ந்து நெரிசலில் சிக்கி இறந்த இந்தியர் களின் எண்ணிக்கை 29 ஆனதாக நேற்று மதியம் செய்திகள் வெளியானது.
அடுத்த சில மணி நேரங்களில் மேலும் 6 இந்தியர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. இதனால், நெரிசலில் சிக்கி இறந்த இந்தியர்கள் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியர்கள் 35 பேர் இறந் திருப்பதை வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப் படுத்தியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.