

ஜப்பான் பிரதமர் சுகா தொலைபேசி வாயிலாக ரஷ்ய அதிபர் புதினுடன் உரையாடியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், “ ஜப்பான் - ரஷ்யா இரு நாடுகள் உறவு சார்ந்தும், பொருளாதாரத்தை மேப்படுத்துவது தொடர்பாகவும் இரு நாட்டுத் தலைவர்களும் உரையாடினர். மேலும் பிராந்தியத்தில் அமைதி நிலவுவது தொடர்பாகவும் இரு நாட்டுத் தலைவர்களும் பேசினர்” என்று கூறப்பட்டுள்ளது.
ஜப்பானின் பிரதமராக புதிதாக பதவியேற்ற சுகா தென்கொரியா, இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளின் தலைவர்களுடனும் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
உடல் நிலையைக் காரணம் காட்டி பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக ஷின்சோ அபே அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஜப்பானின் ஆளும் கட்சியான லிபரல் டெமாக்ரடிக் கட்சி, அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழுவை செப்டம்பர் 1 -ம் தேதி கூட்டியது. இதனைத் தொடர்ந்து கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
இதில் ஷின்சோ அபேவின் அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருக்கும் யோஷிஹிடே சுகா வெற்றி பெற்று கடந்த 15 ஆம் தேதி ஜப்பான் பிரதமராகப் பதவி ஏற்றார்.
பதவி ஏற்றது முதல் சர்வதேச நாடுகளுடான உறவைப் பலப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார் சுகா.