Published : 29 Sep 2020 03:09 PM
Last Updated : 29 Sep 2020 03:09 PM

ஐ.நா. பொதுக்கூட்டத்தில் முக்கியப் பிரச்சினைகளை மோடி புறக்கணித்துவிட்டார்: பாகிஸ்தான்

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்ற இந்தியப் பிரதமர் மோடி காஷ்மீர் மற்றும் பிற உலகளாவியப் பிரச்சினைகளைப் புறக்கணித்துவிட்டார் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கடந்த சனிக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் 75-வது பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் இதில் பேசிய இந்தியப் பிரதமர் மோடியை பாகிஸ்தான் விமர்சித்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பாகிஸ்தான் பிரதிநிதி முனிர் அக்ரம் கூறும்போது, “ஐக்கிய நாடுகள் சபையின் 75-வது பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட இந்தியப் பிரதமர் மோடி, காஷ்மீர் மற்றும் உலகளாவியப் பிரச்சினைகளைப் பேசாமல் புறக்கணித்துவிட்டார். மேலும், சகிப்புத்தன்மையற்ற, பிளவுபட்ட, பொருளாதாரத்தில் தோல்வி அடைந்த இந்தியா அதன் அண்டை நாடுகளுடன் மோதலில் ஈடுபட்டுள்ளது. மோடி சர்வதேசப் பிரச்சினைகள் குறித்துப் பேசாமல் மவுனமாக இருந்துவிட்டார்” என்று தெரிவித்தார்.

மேலும், பாலஸ்தீனம் குறித்த கேள்விக்கும், காலநிலை மாற்றம் குறித்த கேள்விக்கும் பதிலளிக்க மோடி மறுத்துவிட்டார் என்று பாகிஸ்தான் குற்றம் சுமத்தியுள்ளது.

முன்னதாக, ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரையாற்றும்போது, இந்தியா எப்படி சிறுபான்மையினரை நடத்துகிறது, ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், அதன் பிறகான இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகள் ஆகியவை குறித்து விமர்சித்தார்.

''காஷ்மீர் விவகாரத்தைத் தீர்க்காமல் தெற்காசியாவில் அமைதி ஏற்படுவது கடினம். சர்வதேச சட்டத்திட்டங்களின் படி காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்'' என்று இம்ரான்கான் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x