மருத்துவமனையில் மெர்கல் என்னைச் சந்தித்தார்: அலெக்ஸி நவால்னி

மருத்துவமனையில் மெர்கல் என்னைச் சந்தித்தார்: அலெக்ஸி நவால்னி
Updated on
1 min read

மருத்துவமனையில் தன்னைச் சந்தித்த ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலுக்கு ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி நன்றி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி கடந்த வாரம் ஜெர்மனி மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார்.

இதுகுறித்து அலெக்ஸி நவால்னி கூறும்போது, “என்னை வந்து மருத்துவமனையில் சந்தித்த ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தச் சந்திப்பு ரகசியமாக நடந்ததாகவும், நவால்னியின் குடும்பத்தினரும் இதில் கலந்து கொண்டதாகவும் ஜெர்மனி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமசித்து வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி. ரஷ்ய அதிபர் தேர்தலின்போதும் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்ஸி நவால்னிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது.

ஆனால், புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் அலெக்ஸி நவால்னி தொடர்ந்து பொதுவெளியில் புதின் அரசை விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மாதம் டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அலெக்ஸி மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவர் ஜெர்மனியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதை ஜெர்மனி அரசு சமீபத்தில் உறுதிப்படுத்தியது. அவருக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக தங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதாக ஜெர்மனி தெரிவித்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா முற்றிலுமாக மறுத்துள்ளது. இந்த நிலையில் அலெக்ஸி நவால்னியிடம் விசாரணை நடத்த ரஷ்யா முயன்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in