

தென்கொரியாவில் தற்போது கரோனா தொற்று குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென்கொரிய நோய்த் தடுப்பு மையம் தரப்பில், “தென்கொரியாவில் இரண்டாம் கட்டப் பரவல் தொடங்கிய நிலையில் கடந்த மாதம் 15 ஆம் முதல் கரோனா தொற்று குறையத் தொடங்கியுள்ளது. இன்று (திங்கட்கிழமை) 50 பேருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. கடந்த சில நாட்களாகவே கரோனா தொற்று குறைந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவின் தலைநகரான சியோலில் கரோனா வைரஸ் பரவி, நாடு தழுவிய அளவில் தொற்று அதிகரிக்கும் அச்சுறுத்தலில் நாம் இருக்கிறோம் என்று அந்நாட்டுத் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும், மக்கள் சமூக இடைவெளியைப் பொறுப்புடன் கடைப்பிடிக்குமாறு தென்கொரிய அரசு வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக, ஏப்ரல் மாதத்தில் தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கமாகக் குறைந்தது. அதன் பிறகு சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகள் மே மாதத்தில் தளர்த்தப்பட்டன. இந்நிலையில் மக்கள் புழக்கம் அதிகரித்ததும் அங்கு இரண்டாம் கட்டப் பரவல் ஏற்பட்டது. தற்போது மீண்டும் கரோனா பரவல் குறையத் தொடங்கியுள்ளது.
தென்கொரியாவில் 23,661 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21,292 பேர் குணமடைந்துள்ளனர். 406 பேர் பலியாகினர்.