Last Updated : 28 Sep, 2020 12:49 PM

 

Published : 28 Sep 2020 12:49 PM
Last Updated : 28 Sep 2020 12:49 PM

2016, 2017 ஆம் ஆண்டுகளில் 750 டாலர் மட்டுமே வருமான வரியாகச் செலுத்திய அமெரிக்க அதிபர்; நியூயார்க் டைம்ஸ் பரபரப்புத் தகவல்: கட்டுக்கதை என ட்ரம்ப் மறுப்பு

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றபின் 2016, 2017 ஆம் ஆண்டுகளில் வருமான வரியாக 750 டாலர் மட்டுமே செலுத்தியுள்ளார். ஆனால், ட்ரம்ப்பின் நிறுவனங்கள் இந்தியாவில் 2017-ம் ஆண்டில் ரூ.1.70 கோடி வரி செலுத்தியுள்ளன என்று நியூயார்க் டைம்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப் 2-வது முறையாகப் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும், துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வேட்பாளர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் வருமான வரி செலுத்தியது குறித்து நியூயார்க் டைம்ஸ் நாளேடு புலனாய்வு செய்து கடந்த 20 ஆண்டு விவரங்களை எடுத்துச் செய்தி வெளியி்ட்டுள்ளது.

அதுகுறித்த விவரம்:

''அமெரிக்காவின் மிகப்பெரிய தொழிலதிபரான அதிபர் ட்ரம்ப்புக்கு ஏராளமான ரியல் எஸ்டேட்களும், தொழிற்சாலைகளும், ஹோட்டல்களும் பல்வேறு நாடுகளில் இருக்கின்றன. இதிலிருந்து கோடிக்கணக்கான டாலர்கள் ஆண்டுதோறும் வருமானமாக அதிபர் ட்ரம்ப்புக்கு வருகிறது.

அமெரிக்க மக்களால் அதிகம் அறியப்படாத ட்ரம்ப் தனது செல்வாக்கு, பணபலத்தால் கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியி்ட்டார். அதில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனைத் தோற்கடித்து அனைவரும் வியக்கும் வகையில் அதிபராகப் பதவி ஏற்றார்.

டொனால்ட் ட்ரம்ப் தான் அதிபராகப் பதவி ஏற்ற 2016-ம் ஆண்டில் தன்னுடைய ஆண்டு வருமான வரியாக 750 டாலர் மட்டும் செலுத்தியுள்ளார். அதேபோல, 2017-ம் ஆண்டிலும் வருமான வரியாக 750 டாலர் மட்டும் அரசுக்கு செலுத்தியுள்ளார்.

இதில் கடந்த 15 ஆண்டுகளில் அதிபர் ட்ரம்ப் 10 ஆண்டுகளாக அரசுக்கு வருமான வரி செலுத்தியதில்லை. அரசிடம் தான் வருமானம் ஈட்டியதைவிட, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதுதான் அதிகம் என்று பொய்யாகக் கணக்குக் காட்டி வருமான வரி செலுத்துவதைத் தவிர்த்துள்ளார்.

அமெரிக்க அதிபர்களைப் பொறுத்தவரை அவர்களின் சொந்த வருமானம், தொழில், வருவாய் குறித்த விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டிய அவசியம் ஏதும் சட்டப்படி இல்லை. ஆனால், முன்னாள் அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன் முதல் அடுத்துவந்த அனைத்து அதிபர்களும் தங்களின் வருமானத்தை வெளிப்படையாகத் தெரிவித்து வந்தார்கள். ஆனால், தன்னுடைய வரி விவரங்களை ரகசியமாக வைத்து, இதுவரை மக்களுக்கு வெளிப்படுத்தாத ஒரே அதிபராக ட்ரம்ப் இருந்து வருகிறார்.

அமெரிக்க வருவாய் சேவை அறிக்கையின் மூலம், தன்னை ஒரு தொழிலதிபராகவே அதிபர் ட்ரம்ப் அடையாளப்படுத்திக்கொண்டு, ஆண்டுதோறும் கோடிக்கணக்கான டாலரை வரியாகச் செலுத்துவதில் இருந்து தப்பிக்க தொழிலில் இழப்பு ஏற்பட்டதாக கணக்குக் காட்டியுள்ளார்.

தற்போது பல்வேறுவிதமான நிதிச் சவால்கள் அதிகரித்துள்ள நிலையில், தொழிலிலிருந்து அதிகமாகப் பணம் ஈட்டுவதைச் சார்ந்துள்ளார் என்பதை ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன. அதிபராக இருந்துகொண்டு, பணம் ஈட்டுவதிலும் பல்வேறு முரண்பாடுகளை ஏற்படுத்துகின்றன.

கடந்த 20 ஆண்டுகளாக அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரின் நிறுவனங்கள், அவர் பங்குகள் இருக்கும் நிறுவனங்கள் குறித்த வருமான வரி அறிக்கை பெறப்பட்டுள்ளது. அதில் அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற முதல் இரு ஆண்டுகளில் வருமானம் குறித்த விரிவான அறிக்கை இடம் பெற்றுள்ளது. இதில் 2018, 2019 ஆம் ஆண்டு வருமான வரி அறிக்கை மட்டும் இல்லை.

டொனால்ட் ட்ரம்ப் அதிபராகப் பதவி ஏற்ற முதல் இரு ஆண்டுகளில் 7.30 கோடி டாலர் வருமானம் ஸ்காட்லாந்தில் உள்ள கோல்ப் மைதானத்திலிருந்து மட்டும் வந்துள்ளது. பிலிப்பைன்ஸில் உள்ள நிறுவனத்திலிருந்து 30 லட்சம் டாலர், இந்தியாவில் 23 லட்சம் டாலர், துருக்கியிலிருந்து 10 லட்சம் டாலர்கள் வருமானம் ட்ரம்ப்புக்கு வந்துள்ளது.

ஆனால் வெளிநாட்டிலிருந்து கிடைத்த வருமானத்தின் அடிப்படையில் அதிபர் ட்ரம்ப் 2017-ம் ஆண்டில் 750 டாலர் வருமான வரியாகச் செலுத்தியுள்ளார். ஆனால், பனாமா நாட்டில் அதிபர் ட்ரம்ப் வருமான வரியாக 15,598 டாலர்களும், இந்தியாவில் 1.45,400 டாலர்களும், பிலிப்பைன்ஸிஸ் 1,56,824 டாலர்களும் செலுத்தியுள்ளார்''.

இவ்வாறு நியூயார்க் டைம்ஸ் நாளேடு தெரிவித்துள்ளது.

ஆனால், நியூயார்க் டைம்ஸ் நாளேட்டில் வந்த செய்தி போலியானது, பொய்யான செய்தியைப் பரப்பியுள்ளது என்று அதிபர் ட்ரம்ப் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் வெளியிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை நேற்று வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

''நியூயார்க் டைம்ஸ் நாளேடு வெளியிட்ட செய்தி பொய்யானது. இதற்கு முன் இதேபோன்ற செய்தியை வெளியிட்டது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இதேபோன்ற கேள்விகளை எழுப்பியது. இதை நான் சட்டரீதியாக எதிர்கொண்டேன். நான் அரசுக்கு வரி செலுத்தினேன். என் வருமான வரி அறிக்கைகளைப் பார்க்கலாம். அனைத்தும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

நான் தவறான விவரங்களை அளித்திருந்தால், நிச்சயம் வருமான வரித்துறை என்னை வேறுமாதிரி நடத்தியிருக்கும். என் மீது களங்கம் கற்பிக்க என்ன கதைகளை வேண்டுமானாலும் உருவாக்குவார்கள். நான் ஏராளமாக வருமான வரி செலுத்தி இருக்கிறேன். மாநிலங்களுக்கு வருமான வரி செலுத்தி இருக்கிறேன்''.

இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x