

சிரியாவில் நடந்த கார் குண்டுவெடிப்பில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் பலியாயினர்.
இதுகுறித்து சிரிய அரசு ஊடகம் தரப்பில், “சிரியாவின் வடமேற்குப் பகுதியில் நடந்த கார் குண்டுவெடிப்பில் 7 பேர் பலியாயினர். இதில் இரண்டு பேர் குழந்தைகள். 11 பேர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பு நடந்த பகுதி துருக்கியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் துருக்கி ஆக்கிரமிப்புப் பகுதியில், தொடர்ந்து சில மாதங்களாகவே துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது என்று சிரியா சமீபகாலமாக குற்றம் சுமத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் கடந்த ஆண்டு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தினர். மேலும், சிரியாவின் வடக்குப் பகுதியையும் ஆக்கிரமித்தனர். தொடர்ந்து சிரியா மீது துருக்கி தாக்குதல் நடத்தி வருகிறது.
துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறினர்.