Published : 10 Sep 2015 10:02 AM
Last Updated : 10 Sep 2015 10:02 AM

உலக மசாலா: நாயின் ஒயின் சுமை!

அமெரிக்காவின் தென் கரோலினாவைச் சேர்ந்த நேட் குக், ஈவ் என்ற நாயை வளர்த்து வருகிறார். நாயின் தலையில் கண்ணாடிக் கோப்பையை வைத்து, ஒயினை ஊற்றுகிறார். நாய் கோப்பையைச் சுமந்துகொண்டு, சமாளித்தபடி நிற்கிறது. சில நிமிடங்களுக்குப் பிறகு கோப்பையை எடுத்துவிட்டு, ஈவ்வைப் பாராட்டும் விதத்தில் தட்டிக் கொடுக்கிறார். மனிதர்களைப் போல நாயும் தலைச் சுமையைச் சமாளிக்கிறது!

செல்லப்பிராணியை என்னவெல்லாம் செய்ய வைக்கிறார்கள்!

இங்கிலாந்தில் வசிக்கும் க்ளார்க் குடும்பத்தில் 6 சகோதரர்களும் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற வீரார்கள். இவர்களில் 5 சகோதரர்கள் 90 வயதைக் கடந்தும் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார்கள். இதில் ஒருவர் கைது செய்யப்பட்டு முசோலினியின் மகள் முன் நிறுத்தப்பட்டிருக்கிறார். இன்னொருவர் இந்தியாவில் உள்ள மகாராஜா ஒருவரின் விருந்தினராக வந்திருக்கிறார், வாடிகனில் போப்பைச் சந்திக்கும் வாய்ப்பு ஒருவருக்குக் கிடைத்திருக்கிறது என்று சுவாரசியமாகத் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

‘’போருக்குச் செல்லும்போது வழியனுப்பிய எங்கள் அம்மா, 6 பேரும் போவது போல பத்திரமாகத் திரும்பி வரவேண்டும் என்று வாழ்த்தினார். அம்மாவின் எண்ணப்படி நாங்கள் ஜெர்மனி, இத்தாலி, பர்மா எல்லாம் சுற்றிவிட்டுப் பத்திரமாகத் தாய்நாடு திரும்பினோம். இது எங்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறது. எங்களுடன் இருந்த எத்தனையோ லட்சம் வீரர்கள் மடிந்து போய்விட்டனர். எங்களில் ஒருவன் 82ம் ஆண்டு இறந்துவிட்டான். நாங்கள் எஞ்சியிருக்கிறோம்’’ என்கிறார் டோனி. ஹெர்பர்ட் 99, டாம் 97, பீட்டர் 95, பால் 92, டோனிக்கு 90 வயது. 10 குழந்தைகளில் ஜான் க்ளார்க் காய்ச்சலால் 55 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். 3 சகோதரிகளில் ஒருவர் மட்டும் உயிருடன் இருக்கிறார்.

அபூர்வ சகோதரர்கள்!

இங்கிலாந்தின் லிவர்பூலில் ‘ஜங்க் ஃபுட் கஃபே’ என்ற உணவு விடுதியை நடத்தி வருகிறார்கள் நடாலி க்ரியன், கப்பி ஹோல்ம்ஸ் என்ற பெண்கள். இந்த உணவு விடுதியில் கிடைக்கும் உணவுகள் அனைத்தும் வீணான பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்டவை. ஆரோக்கியமாகவும் சுவையாகவும் இருக்கின்றன.

‘‘உலகில் ஆண்டுக்கு 1.3 பில்லியன் டன் உணவுப் பொருட்கள் வீணாகின்றன. அதே நேரம் 4 நொடிகளுக்கு ஒருவர் பசியால் மரணம் அடைகிறார். இது எவ்வளவு மோசமான விஷயம்? வீணாகும் உணவுப் பொருட்களுக்கு எதிரான யுத்தத்தை ஆரம்பித்திருக்கிறோம். மளிகைக் கடைகள், பெரிய உணவகங்கள், சூப்பர் மார்க்கெட்களில் வீணாகும் பொருட்களை வாங்கிக்கொள்கிறோம். அவற்றைக் கொண்டு சுவையான உணவுகளைத் தயாரிக்கிறோம். இங்கு வரும் ஏழைகள் சாப்பிட்டுவிட்டு, முடிந்ததைக் கொடுத்துவிட்டுச் செல்லலாம்’’ என்கிறார் நடாலி.

தற்போது வார இறுதிகளில் மட்டும் இயங்கி வருகிறது இந்த விடுதி. நிறையப் பேர் இவர்களின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு நன்கொடை அளிக்க முன்வருகிறார்கள். யாரிடமும் பணமாகப் பெற்றுக்கொள்வதில்லை. உணவுப் பொருட்களாக மட்டுமே வாங்கிக்கொள்கிறார்கள். இந்த விடுதியில் இவர்கள் இருவர் மட்டுமே வேலைகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

அற்புதமான காரியங்களைச் செய்யும் தோழிகளுக்குப் பாராட்டுகள்!

சீனாவின் ஸியான் பகுதியில் உள்ள குழந்தைகள் பள்ளியில், கட்டணமாகக் கொடுக்கப்படும் பணத்தில் குழந்தைகளின் பெயர்களை எழுதித் தரும்படிக் கட்டாயப்படுத்துகிறது நிர்வாகம். கள்ள நோட்டு அதிகம் புழங்குவதால், பள்ளி ஊழியர்களால் அவற்றைக் கண்டுபிடிக்க இயலவில்லை. என்னென்னவோ செய்து பார்த்த பள்ளி நிர்வாகம், இறுதியில் குழந்தைகளின் பெயர்களைப் பணத்தில் எழுதித் தரும்படிக் கேட்டுக்கொண்டது.

தங்கள் நேர்மையைப் பள்ளி நிர்வாகம் சந்தேகிக்கிறது என்று பெற்றோர் கொதிக்கிறார்கள். பள்ளி நிர்வாகமோ, தங்களுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறிவிட்டது. சில பெற்றோர் தாளின் ஓரத்தில் பென்சிலால் பெயர்களை எழுதிக் கொடுத்து வருகிறார்கள். குழந்தைகளிடம் இருந்து ஆசிரியர்களே பணத்தை வாங்கி, பரிசோதித்து, நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பதால் ஆசிரியர்களும் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்கள்.

பணத்தில் எழுதுவது குற்றமில்லையா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x