

கரோனா தடுப்பு மருந்து பரவலாக உலகம் முழுவதும் கிடைக்கும்வரை கரோனாவுக்கு 20 லட்சம் பேர் வரை பலியாகி இருப்பார்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறும்போது, “கரோனாவுக்கு எதிராகச் சரியான போராட்டத்தை முன்னெடுக்காமல் இருந்ததால் கரோனாவுக்குப் பலர் பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் பரவலாக கரோனாவுக்கு மருந்து கிடைக்கும்வரை 20 லட்சம் பேர்வரை பலியாகி இருப்பார்கள். இது மிகவும் சோகமானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊரடங்கு காரணமாகவே கரோனா தொற்று அதிகமாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு வருத்தம் தெரிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 2.4 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.
கரோனா பாதிப்பில் முதல் நான்கு இடங்களில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன. கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.