ஜான்சன் & ஜான்சன் கரோனா தடுப்பு மருந்து: முதற்கட்டச் சோதனையில் வெற்றி

ஜான்சன் & ஜான்சன் கரோனா தடுப்பு மருந்து: முதற்கட்டச் சோதனையில் வெற்றி
Updated on
1 min read

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் கண்டுபிடித்துள்ள கரோனா தடுப்பு மருந்தின் முதற்கட்டச் சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது.

கரோனாவுக்கான தடுப்பு மருந்தை உருவாக்குவதில் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனமும் கரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இந்த நிலையில் இத்தடுப்பு மருந்தின் முதற்கட்டச் சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ad26.COV2.S என்று பெயரிடப்பட்டுள்ள கரோனா தடுப்பு மருந்து முதற்கட்டச் சோதனையில் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கியுள்ளதாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்பரிசோதனை குறித்து ஜான்சன் & ஜான்சன் தரப்பில், “முதலில் ஆரம்பக்கட்டப் பரிசோதனை குரங்குகளுக்கு நடத்தப்பட்டது. பின்னர் அமெரிக்க அரசின் ஆதரவுடன் ஆரோக்கியமான 1000 (பெரியவர்கள்) பேருக்கு நடத்தப்பட்டது.

மேலும், இறுதிக்கட்டப் பரிசோதனையில் சுமார் 60,000 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்கான அனுமதிகள் விண்ணப்பம் அடிப்படையில் வழங்கப்பட உள்ளன. மேலும், கரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம்கட்டச் சோதனை இந்த வருடம் இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸால் தற்போது உலகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்தக் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன. குறிப்பாக, ரஷ்யாவின் ஸ்புட்னிக் -5 என்ற பெயரிலான தடுப்பு மருந்து விரைவில் சந்தைக்கு வரவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in