ரஷ்ய விமானிகளுக்கும் மருத்துவர்களுக்கும் நன்றி: அலெக்ஸி நவால்னி

ரஷ்ய விமானிகளுக்கும் மருத்துவர்களுக்கும் நன்றி: அலெக்ஸி நவால்னி
Updated on
1 min read

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி தான் மயக்கமடைந்தபோது துரிதமாகச் செயல்பட்ட ரஷ்ய விமானிகளுக்கும், மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி கூறும்போது, “விமானத்தில் நான் மயக்கமடைந்தபோது உடனடியாகச் செயல்பட்டு என்னைக் காப்பாற்றிய ரஷ்ய விமானிகளுக்கும், மருத்துவர்களுக்கும் எனது நன்றி. நீங்கள் நல்ல மக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி. ரஷ்ய அதிபர் தேர்தலின்போதும் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்ஸ் நவால்னிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது.

ஆனால், புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் அலெக்ஸி நவால்னி தொடர்ந்து பொதுவெளியில் புதின் அரசை விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மாதம் டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அலெக்ஸி மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவர் ஜெர்மனியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதை ஜெர்மனி அரசு சமீபத்தில் உறுதிப்படுத்தியது. அவருக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக தங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதாக ஜெர்மனி தெரிவித்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா முற்றிலுமாக மறுத்துள்ளது. இந்த நிலையில் அலெக்ஸி நவால்னியிடம் விசாரணை நடத்த ரஷ்யா முயன்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in