Published : 20 Sep 2015 12:23 PM
Last Updated : 20 Sep 2015 12:23 PM

உலக மசாலா: வீடியோ எடுத்த பிறகாவது பர்கர் கொடுத்தீங்களா ஜுலியோ?

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் வசிக்கும் ஜுலியோ லோபெஸ், சைபீரிய ஹஸ்கி நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். பிறந்து 18 மாதங்களே ஆன இந்த நாயின் முகபாவனைகள் எல்லோரையும் ஆச்சரியத் தில் ஆழ்த்துகின்றன. பொது வாக நாய்கள் இவ்வளவு பாவனைகளை முகத்தில் வெளிப்படுத்துவதில்லை. யுகா என்ற இந்த நாய் முன்பாக ஜுலியோ ஒரு பர்கரைச் சுவைத்துச் சாப்பிடுகிறார். ஒவ்வொரு முறை கடிக்கும்போதும் தனக்கு ஒரு துண்டு தருவார் என்று எதிர்பார்க்கிறது யுவா. ஆனால் ஜுலியோ தான் மட்டுமே சாப்பிடச் சாப்பிட யுவாவின் முகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஏமாற்றம் தெரிய ஆரம்பிக்கிறது. இறுதியில் கடைசித் துண்டு பர்கரை ஜுலியோ விழுங்கிய பிறகு, அதிர்ச்சியில் உறைந்துவிடுகிறது யுவா. இந்த வீடியோவை இணயத்தில் 20 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்.

வீடியோ எடுத்த பிறகாவது பர்கர் கொடுத்தீங்களா ஜுலியோ?

ஜப்பானின் கியோடா நகரில் வசிக்கும் 68 வயது சிசாகோ ககேஹி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இவரின் கதையைக் கேட்டவர்கள், கியாட்டோவின் ‘பிளாக் விடோ’ என்று அழைக்கிறார்கள். இதுவரை 8 முறை திருமணம் செய்திருக்கிறார் சிசாகோ. கணவர்கள் அனைவருமே ஒருகட்டத்தில் மரணம் அடைந்துவிட்டனர். இன்று கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் சிசாகோ. 2013ம் ஆண்டு சிசாகோவின் 75 வயது கணவர், திருமணம் ஆன ஒரே மாதத்தில் திடீரென்று இறந்து போனார். ஆரம்பத்தில் மாரடைப்பு என்று நினைத்தனர். ஆனால் கியோடோ காவல்துறை சிசாகோவின் பழைய விஷயங்களை ஆராய்ந்து பார்த்தது. அதில்தான் அவரது கணவர்கள் வரிசையாக மரணம் அடைந்த விஷயம் தெரிந்தது. சிசாகோவுக்கே தெரியாமல் முழு வீச்சில் விசாரணையில் இறங்கியது காவல்துறை. மரணமடைந்தவர்களில் பெரும்பாலானோர் உயில் எழுதிக் கொடுத்த பிறகு, விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்தது. சிலர் மாரடைப்பு, புற்றுநோய், விபத்து போன்றவற்றிலும் மரணத்தைத் தழுவியிருக்கின்றனர். கடந்த 21 ஆண்டுகளில் 8 பேரைத் திருமணம் செய்து, 8 பேரும் மரணத்தைச் சந்தித்திருக்கிறார்கள். 8 பேரிடமிருந்தும் ஏராளமான சொத்துகள் சிசாகோவுக்கு வந்து சேர்ந்திருக்கின்றன.

‘‘எனக்கு எதுவும் தெரியாது. நான் ஒரு அப்பாவி. 8 முறை திருமணம் செய்தது ஒரு குற்றமா?’’ என்று சிசாகோ கேட்கும்போது அவர் மீது பரிதாபம் மட்டுமே வருகிறது. ஆனால் அவரது வீட்டைச் சோதனை செய்தபோது, விஷம் பதுக்கி வைத்திருந்ததைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். பத்திரிகைகளில் வரும் வயதான, பணக்காரர்களின் விளம்பரங்களைப் பார்த்து, அவர்களைத் திருமணம் செய்திருக்கிறார் சிசாகோ. ஆனால் இன்னும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை.

யாரைத்தான் நம்புவதோ…

சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் வசிக்கிறார் கன்ஹுய். கத்திச் சண்டைப் பயிற்சியாளராக இருக்கிறார். ஒருநாள் அவரின் காதலி பயிற்சி நடக்கும் இடத்துக்கு வந்தார். ஆனால் கன்ஹுய் வேலையில் மும்முரமாக இருந்தார். நீண்ட நேரம் கழித்தே காதலியைச் சந்தித்தார். உடனே காதலிக்குக் கோபம் வந்து கத்த ஆரம்பித்துவிட்டார். கொஞ்சம் கொஞ்சமாகச் சண்டை வளர்ந்து பெரிதாகிவிட்டது. எப்படிச் சமாளிப்பது என்று தெரியாத கன்ஹுய், தன் நண்பனிடம் பைக் வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டார். 2,200 கி.மீ. பயணம் செய்து பெய்ஜிங் வந்துவிட்டார். கோபம் குறைந்த பிறகு கன்ஹுயைத் தேடிக்கொண்டு காதலியும் வந்து சேர்ந்தார். அவரும் இந்தப் பயணத்தில் இணைந்துகொண்டார். இருவரும் ஒற்றுமையாகப் பயணத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பினர். இரண்டு ஆண்டுகளில் மீண்டும் சண்டை வந்தது. தங்களது சண்டையை நிறுத்தும் சக்தி பயணத்துக்குத்தான் இருக்கிறது என்பதை இருவரும் அறிந்திருந்தனர். இந்த முறை சைக்கிள் மூலம் ஆப்பிரிக்கா செல்லத் திட்டமிட்டனர். சீனா, திபெத், நேபாளம் வழியாக கென்யா வரை செல்லத் திட்டமிட்டனர்.

‘‘ஆப்பிரிக்காவில் எங்களை வேற்றுக் கிரகவாசிகளைப் போலப் பார்த்தனர். எத்தனையோ முன்னேற்றங்கள் இன்னும் எவ்வளவோ மக்களுக்குச் சென்று சேரவில்லை என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. ஜாம்பியாவில் பயணம் செய்தபோது எங்களின் பை களவு போய்விட்டது. நல்லவேளை பாஸ்போர்ட், கிரடிட் கார்ட் எல்லாம் வேறொரு பையில் இருந்ததால் தப்பித்தோம். 6 மாதப் பயணங்களுக்குப் பிறகு மீண்டும் வீடு திரும்பினோம். இனி சண்டை வந்தால் பயணங்களைப் பற்றிப் பேசுவோமே தவிர, இன்னொரு பயணத்துக்குக் கிளம்பிவிட மாட்டோம்’’ என்கிறார் கன்ஹுய்.

அட! நல்ல டெக்னிக்காக இருக்கே…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x