

இந்தியா - சீனா இடையே நிலவும் பிரச்சினைக்கு உதவத் தயார் என்றும், இரு நாடுகளும் தங்களுக்கு நிலவும் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளும் என்று நம்புவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசும்போது, “சீன - இந்திய உறவில் சமீபகாலமாக சிரமங்கள் எழுந்துள்ளன. விரைவில் அவர்கள் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். எங்களால் இந்த விவகாரத்தில் உதவ முடிந்தால், நாங்கள் உதவி செய்யத் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா- சீனாவுக்கு இடையே சமீபகாலமாக எல்லைப் பிரச்சினை அதிகரித்து வருகிறது. அண்மையில் லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறியதில் இருந்தே அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாட்டு ராணுவமும் எல்லையில் படைகளைக் குவித்துள்ளன.
எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க இருநாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனினும், பதற்றம் குறையவில்லை. எல்லைப் பதற்றத்துக்கு சீனாதான் காரணம் என்று இந்தியாவும், இந்தியாதான் காரணம் என்று சீனாவும் மாறி மாறி பரஸ்பரக் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் இவ்விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உதவுவதாகத் தெரிவித்துள்ளார்.