

சவுதி அரேபியா மீதான தாக்குதலை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இத்தாக்குதலை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளது,
இதுகுறித்து அமெரிக்கா தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களான ஹவுத்தி இயக்கத்தினர் சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும். அவர்கள் நடத்தும் தாக்குதல் வருத்தத்தை அளிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானோ ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது. ஏமன் அரசுடன் இணைந்து சவுதி நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை முன்னரே கண்டித்திருந்தது.