பாப் பாடகரை ‘நீக்ரோ’ என்று குறிப்பிட்ட ஜெர்மன் அமைச்சர் மீது சமூக வலைத்தளவாசிகள் கடும் ஆவேசம்

பாப் பாடகரை ‘நீக்ரோ’ என்று குறிப்பிட்ட ஜெர்மன் அமைச்சர் மீது சமூக வலைத்தளவாசிகள் கடும் ஆவேசம்
Updated on
1 min read

தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் ஜெர்மனியின் பிரபல பாப் பாடகர் ரொபர்டோ பிளாங்கோ என்பவரை ‘வொண்டர்ஃபுல் நீக்ரோ’ என்று வர்ணித்தார் ஜெர்மன் அமைச்சர் ஜோகிம் ஹெர்மான். இது சமூக வலைத்தளங்களில் அவர் மீதான கடும் விமர்சனங்களை ஈர்த்துள்ளது.

ட்விட்டர் ஹேஷ்டேக் #Neger தற்போது பரவலாக டிரெண்டிங் ஆகிக் கொண்டிருக்கிறது. அந்தப் பாப் பாடகர் ஆப்பிரிக்க-கியூபா வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோகிம் ஹெர்மான் என்ற அமைச்சர் பேசும் போது, “ரொபர்டோ பிளாங்கோ எப்போதுமே ஒரு அருமையான நீக்ரோ, பல ஜெர்மானியர்களும் அவரை ஒரு அதிசய மனிதராகவே பார்க்கின்றனர். ஜெர்மனியில் குடியேறியவர்கள் பலர் தங்கள் வாழ்க்கையில் வெற்றி கண்டுள்ளனர். கால்பந்து கிளப்பான பேயர்ன் மூனிக்கில் பல நட்சத்திர வீரர்கள் கறுப்புத் தோல் உடையவர்களே” என்று பேசியுள்ளார்.

பிளாங்கோ என்ற பெயர் ஜெர்மனியில் வீடுதோறும் பிரசித்தம் என்று கூறப்படுகிறது.

1960களின் இறுதியிலும் 1970-களிலும் உச்சத்தில் இருந்தவர் பாப் பாடகர் ரொபர்டோ பிளாங்கோ. அப்போது முதல் ஜெர்மனியில் இவரது புகழ் பயங்கரமாக வளர்ந்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஜெர்மனியில் அதிக அளவில் பிற நாட்டவர்கள் குடிபுகுந்தனர்.

அமைச்சரின் இந்த நிறவெறி பேச்சை அடுத்து சமூக வலைத்தளங்களில் அவர் மீதான காட்டமான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

ஹெரிஸ்ட்வோல் என்பவர் தனது ட்விட்டரில், “நடனம், பாடல், கால்பந்து என்று வெள்ளை சமூகத்தினரை குஷிப்படுத்தினால் ஒரு நீக்ரோ ‘அதிசயிக்கத் தக்க மனிதர்’ ஆகிவிடுகிறார்.

மற்றொரு ட்விட்டர் பதிவில், “ஜோகிம் ஹெர்மான் ஓபாமாவையும் ஒண்டர்ஃபுல் என்பாரோ என்று ஐயமாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

ஆனால் 78 வயதான பாடகர் ரொபர்டோ பிளாங்கோ மிகவும் பெருந்தன்மையாக இதனை அணுகியுள்ளார், “நான் இதனால் வருத்தமடையவில்லை, ஆனால் அமைச்சர் வேறொரு சொல்லைப் பயன்படுத்தியிருக்கலாம், ஆனால் அவர் புண்படுத்தும் விதமான நோக்கத்தில் அதனை பயன்படுத்தவில்லை என்று அறிகிறேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in