

ஜப்பான் பிரதமராக யோஷிஹிடே சுகா பதவியேற்ற பிறகு, முதல் முறையாக அமெரிக்கா - ஜப்பான் இரு நாடுகள் உறவு குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் தொலைபேசியில் உரையாடினார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் சுகா கூறும்போது, “ ஜப்பான்-அமெரிக்கக் கூட்டணி பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் அடித்தளம் என்று ட்ரம்ப்பிடம் கூறினேன். தொடர்ந்து நெருக்கமாக, இணைந்து செயல்பட உள்ளோம்” என்று தெரிவித்தார்.
மேலும், இரு நாட்டு உறவில் முன்னேற்றம் ஏற்பட ஒருங்கிணைந்து செயல்பட ட்ரம்ப்பும் ஒப்புக்கொண்டார் என்று யோஷிஹிடே சுகா தெரிவித்தார்.
ஜப்பான் பிரதமராகப் பதவி வகித்து வந்த ஷின்சோ அபே, சில ஆண்டுகளாக குடல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இரண்டு முறை மருத்துவப் பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்குச் சென்று வந்த நிலையில், ஷின்சோ அபே காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் உடல் நிலையைக் காரணம் காட்டி பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக ஷின்சோ அபே அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஜப்பானின் ஆளும் கட்சியான லிபரல் டெமாக்ரடிக் கட்சி, அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழுவை செப்டம்பர் 1 ஆம் தேதி கூட்டியது. இதனைத் தொடர்ந்து கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
இதில் ஷின்சோ அபேவின் அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருக்கும் யோஷிஹிடே சுகா வெற்றி பெற்று கடந்த 15 ஆம் தேதி பிரதமராகப் பதவி ஏற்றார்.