

லடாக் எல்லையில் நிலவும் பிரச்சினையை திசை திருப்புவதற்காக தென் சீன கடல் பகுதியில் சீன ராணுவம் படைகளை குவித்து வருகிறது.
லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த ஜூன் மாதம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனால், பதற்றம் ஏற்பட்டு இருதரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டன.
இதனிடையே, பதற்றத்தை தணிக்க இருதரப்பிலும் ராணுவ அதிகாரிகள் தரப்பில் ஏற்கெனவே 5 முறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இருப்பினும் சீனா இன்னும் முழுமையாக படைகளை விலக்கிக் கொள்ளவில்லை. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை தொடர்பாகவும் சீன ராணுவத்திடம் இருந்து தகவல் வரவில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது.
உலக நாடுகள் அதிருப்தி
இந்நிலையில், லடாக்கில் சீனாவின் அத்துமீறலால் உலக நாடுகள் அதிருப்தி அடைந்துள்ளன. அதனால், லடாக் பிரச்சினையை உலகின் கவனத்தில் இருந்து திசை திருப்பும் வகையில் தென் சீன கடல் பகுதியில் சீன கடற்படையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். தென் சீன கடல் எல்லையில் சீனாவுடன் ஜப்பான், வியட்நாம், தென்கொரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் உள் ளிட்ட நாடுகள் கடல் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. ஆனால், 90 சதவீத கடல் பகுதி தங்களுக்கே சொந்தம் என்று சீனா உரிமை கொண்டாடுகிறது.
இந்நிலையில், தெற்கு கடல் பகுதிகளில் ஜப்பான், கொரியா கடல் எல்லை பகுதியில் சீனா கடற்படை வீரர் களை குவித்து வருகிறது. ஏற்கெனவே, சமீபத்தில் அங்கு ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இப்போது சீன படைகள் தொடர்ந்து போர்ப்பயிற்சியிலும் ஈடுபடுகின்றன. லடாக் பிரச்சினையை திசை திருப்பவே சீனா இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதாக கருதப்படுகிறது.