

புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கு ஆசிய அரசியல் பாடம் நடத்ததும் பேராசிரியர் ஏ.கே.பாஷா தனது 2006-ம் ஆண்டு ஹஜ் அனுபவத்தையும், தான் கண்ட பெருந்துயர கூட்ட நெரிசலையும் விவரிக்கிறார்.
2006-டிசம்பர்-ஜனவரியில் நான் என் மனைவியுடன் ஹஜ் யாத்திரை மேற்கொண்டேன். பயணத்தின் போது, சதாம் ஹுசைன் தூக்கிலிடப்பட்ட நேரம் அது, அராபியர்களிடையே உணர்ச்சிகள் பொங்கி வந்து கொண்டிருந்த காலம். அந்த நாட்டின் அரசியல் காய்ச்சல் ஹஜ் யாத்திரீகர்களையும் பிடித்துக் கொண்டது.
உணர்ச்சிகளும் வாதங்களும் ஹஜ் சூழ்நிலையை ஆக்ரமித்தது. பல்வேறு மதம், இனம், மொழி சார்ந்த பலதரப்பட்ட லட்சக்கணக்கான மனிதர்கள் ஒரே இடத்தில் மதத்தின் பெயரால் கூடுகின்றனர் என்றால் அதன் உற்சாகமும் ஆற்றலும் எப்படிப் பட்டது என்பதை நாம் கற்பனை செய்துகொள்ளலாம்.
எங்கள் குழு சிறப்பு வாய்ந்தது. எங்களுடன் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எம்.அகமதி வந்திருந்தார். மேலும், இந்தியாவின் பிறபகுதிகளிலிருந்தும் முக்கியஸ்தர்கள் சிலர் எங்கள் குழுவில் இருந்தனர். பயணத்தின் தொடக்கத்திலிருந்தே, இவ்வளவு பெரிய கூட்டத்துக்கான ஏற்பாடுகளின் போதாமை எனக்கு தெரியவந்தது.
சவுதி அதிகாரிகள் அரபு மொழியிலேயே தொடர்பு கொண்டனர். பலநாடுகளிலிருந்தும் வந்துள்ள முஸ்லிம்களுக்கு அரபு மொழி தெரிய வாய்ப்பில்லை என்பதை அவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தே அதிகமான யாத்திரீகர்கள் செல்கின்றனர். அதாவது இந்தோனேசியா, பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆப்கன் ஆகிய நாடுகளிலிருந்து ஹஜ் செல்வோர் ஏராளம். இங்கிருந்து வருவோர் பல மொழிகளைப் பேசக்கூடியவர்கள். வயதானவர்களுக்கு சிறப்புக் கவனம் தேவை. அதிலும் பல முதியவர்கள் அயல்நாட்டுக்கு முதல் முறையாகவே வருவார்கள். இதனால் திக்குதிசையற்று இருப்பார்கள். மேலும் சவுதி அதிகாரிகள், போலீஸின் திடீர் உத்தரவுகள் இவர்களுக்கு புரிய வாய்ப்பில்லை.
அதேபோல் முதன் முறையாக வருபவர்களுக்கு இன்னொரு பிரச்சினை என்னவெனில் ஆண்களையும் பெண்களையும் சவுதி அரேபியாவில் பிரித்து விடுவார்கள். இதனால் ஹஜ் செல்வோர்களின் குடும்பங்களுக்கு பதட்டம் அதிகரிக்கும் ஆண்கள் தனி, பெண்கள் தனி என்று பிரிப்பதால் பலரும் கடினமான ஒரு நிலையை எதிர்கொள்ள நேரிடும். இது பல்கிப் பெருகும் காரணம் போலீஸுக்கும் யாத்திரீகர்களுக்கும் எந்த விதமான புரிதலும் சாத்தியமில்லை.
முதலில் வழிபாட்டுடன் மினாவில் ஹஜ் யாத்திரை தொடங்கும். பிறகு காபா மசூதியை பிரதட்சணம் செய்ய வேண்டும். பிறகு சைத்தானை நோக்கி கல்லெறிதல். இந்த கடைசி சடங்கின்போதுதான் அனைத்து விதமான துயர சம்பவங்களும் நடைபெறுகின்றன. அதாவது சூரியன் மறைவதற்குள் இந்த கல்லெறிதல் நடைபெறுவது அவசியம். இதனால் யாத்திரீகர்களிடையே ஒரு பதட்டமும் ஒரு இனம்புரியாத அவசரமும் இருப்பதை பார்க்கலாம். மினாவை அடைய இவர்கள் அவசரம் காட்டுவது பயங்கர ரிஸ்க் சமாச்சாரம்.
அந்த ஆண்டு ஜனவரி 12-ம் தேதி நாங்கள் கடைசி சடங்குக்காக மினாவுக்கு திரும்பிக் கொண்டிருந்தோம். ஆனால் தூரத்திலிருந்து பார்த்த போது எங்களால் நம்ப முடியவில்லை, மிகப்பெரிய கூட்ட நெரிசல் எங்கள் கண்முன் நடந்தது. மக்கள் திரளின் இருவேறு அலைகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கலந்தன. எங்களுக்கு பயம் தொற்றியது. நாங்கள் பாதி வழியிலேயே நின்று பிறகு மெக்கா திரும்பினோம்.
அடுத்த நாள் அதிகாலை 3 மணிக்கே மினா நோக்கி கிளம்பினோம். வழியில் ஷூக்கள், செருப்புகளின் மிகப்பெரிய குவியல், துணிமணிகளின் குவியல் ஒரு புறம், தண்ணீர் பாட்டில்கள் சிதறலாகவும் குவியலாகவும் ஆங்காங்கே கிடந்தன. நெரிசலில் சிக்கி பலியானோர்களை போலீஸ் லாரிகளில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
அதிகாரிகளிடம் வினவிய போது 350 பேர் கொல்லப்பட்டனர் என்றனர். ஆனால் இந்த அதிகாரபூர்வ தகவல் நம்பும்படியாக இல்லை. ஏனெனில் அங்கு கிடந்த மலைபோன்ற பொருட்கள் அவ்வாறுதான் எங்களுக்கு அறிவுறுத்தியது.
மெக்காவிலிருந்து மினாவுக்கு போக வர ஒரே வழிதான். ஆனால் சவுதி அரசு மாற்று வழி ஒன்றை உருவாக்கியுள்ளது என்று என்னிடம் தெரிவித்தனர், ஆனால் மினாவிலிருந்து மெக்காவுக்கான அந்த வழி மிக தொலைவான வழி என்பதால் பலரும் பழைய குறுகலான பாதையை தேர்ந்தெடுக்கின்றனர். இதுதான் பெரிய நெரிசல்களுக்கு வழிவகுக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் இதே குறுகிய பாதையில்தான் பெரிய நெரிசல்கள் ஏற்படுகின்றன. ஆனால் சவுதி அரசு ஒன்றும் அதற்காகச் செய்வதில்லை. சுமார் 30 லட்சம் மக்களை ஓரிடத்தில் சேர்க்கிறது ஹஜ். இதில் நிறைய விஷயங்கள் நெருக்கடியையும் நெரிசலையும் தோற்றுவிக்கும். மக்கள் மதத்தால் இணைக்கப்படுகின்றனர், ஆனால் அரபு அரசாங்கத்தின் அரசியல் அசட்டுணர்வுகளினால் மக்கள் பிரிக்கப்படுகின்றனர். துயரங்கள் நிகழும்போது சதி நடந்ததான சந்தேகங்கள் எழுவது இயல்பு.
சவுதி அரசாங்கம் மற்ற நாடுகளிலிருந்து கூட்ட நெரிசல் நிர்வாகத்தைக் கற்க வேண்டும். இந்தியாவில் கும்பமேளா, வாடிகன் ஆகியவற்றில் எப்படி மிகப்பெரிய கூட்டங்களை நிர்வகிக்கிறார்கள் என்பதை சவுதி கற்றுக் கொள்ள வேண்டும். பிறரிடமிருந்து கற்றுக் கொள்வதில் தீங்கு ஒன்றுமில்லை.