Last Updated : 18 Sep, 2020 02:35 PM

 

Published : 18 Sep 2020 02:35 PM
Last Updated : 18 Sep 2020 02:35 PM

கரோனாவால் உலக அளவில் கூடுதலாக 15 கோடி குழந்தைகள் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுவார்கள்; ஒட்டுமொத்தமாக 120 கோடி குழந்தைகள் பாதிக்கப்படலாம்: யுனிசெஃப் கவலை

கோப்புப்படம்

நியூயார்க்

கரோனாவில் ஏற்பட்ட பாதிப்பால் உலக அளவில் கூடுதலாக 15 கோடி குழந்தைகள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள். தோராயமாக பல பரிமாண ஏழ்மைக்குத் தள்ளப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 120 கோடியாக அதிகரிக்கும் என்று யுனிசெஃப் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

யுனிசெஃப் மற்றும் சேவ் தி சில்ட்ரன் எனும் குழந்தைகள் நல அமைப்பும் இணைந்து 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் குழந்தைகளுக்குக் கிடைக்கும் கல்வி, சுகாதாரம், குடியிருக்கும் வீடு, சத்துணவு, கழிப்பறை வசதி, சுத்தமான குடிநீர் ஆகியவை குறித்து பல பரிமாண ஏழ்மை குறித்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு குறித்த அறிக்கை நேற்று ஐ.நா.வில் வெளியிடப்பட்டது.

அதில், “பல பரிமாண வறுமைகளான கல்வி, சுகாதாரம், குடியிருக்கும் வீடு, சத்துணவு, கழிப்பறை வசதி, சுத்தமான குடிநீர் ஆகியவை கிடைக்காமல் வறுமையில் வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை கரோனா வைரஸ் பரவல் தொடங்கியதில் இருந்து 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதாவது கரோனா தொடங்கியதிலிருந்து உலக அளவில் வறுமை நிலைக்குத் தள்ளப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 15 கோடி அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக உலக அளவில் 120 கோடி குழந்தைகள், பல பரிமாண வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என ஆய்வில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில், 45 சதவீதக் குழந்தைகள், கரோனா வைரஸ் பரவலுக்கு முன்பாக, கல்வி, சுகாதாரம், குடியிருக்கும் வீடு, சத்துணவு, கழிப்பறை வசதி, சுத்தமான குடிநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை இழந்திருந்தார்கள்.

கரோனா வைரஸ் பரவலுக்குப்பின் இந்தச் சூழல் இன்னும் மோசமடைந்து, வரும் மாதங்களில் மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது. கரோனா வைரஸுக்கு முன்பை விட அதிகமான குழந்தைகள் வறுமையை அனுபவிப்பது மட்டுமல்லாமல், ஏழ்மையான குழந்தைகளும் இன்னும் மோசமான ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட உள்ளார்கள்.

இருப்பினும் குழந்தைகளுக்குத் தேவையான இந்த வசதிகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமல், குழந்தைகள் பாதிக்கப்படாமல் தடுக்க சேவ் தி சில்ட்ரன், யுனிசெஃப் தொடர்ந்து கண்காணிக்க கடமைப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவலுக்கு முன் உலக அளவில் குழந்தைகள் இழந்த உரிமைகள் 0.7 சதவீதமாக இருந்த நிலையில், கரோனா தாக்கத்துக்குப்பின் 15 சதவீதம் அதிகரித்து 0.85 சதவீதமாக அதிகரித்துள்ளது.

யுனிசெஃப் நிர்வாக இயக்குநர் ஹென்ரிட்டா ஃபோர் கூறுகையில், “கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலகின் பல்வேறு நாடுகளிலும்கொண்டுவரப்பட்ட ஊரடங்கு நடவடிக்கை, கோடிக்கணக்கான குழந்தைகளை வலுக்கட்டாயமாக ஏழ்மையில் தள்ளிவிட்டது.

வறுமையிலிருந்து தப்பிக்கும் கூட்டத்தில் உள்ள குடும்பங்கள் பின்தங்குகின்றன. மற்றவர்கள் தாங்கள் இதுவரை பார்த்திராத அளவிலான இழப்பை அனுபவிக்கின்றனர். மிக முக்கியமாக, இந்த நெருக்கடியின் முடிவை விட நாம் இன்னும் தொடக்கத்தில்தான் இருக்கிறோம்” எனத் தெரிவத்தார்.

சமூக பாதுகாப்பு, அரசின் நிதிக் கொள்கைகள், சமூக சேவையில் முதலீடுகள், வேலைவாய்ப்பு, தொழிலாளர் சந்தையில் முன்னேற்றமான போக்கு போன்றவைதான் இன்னும் எதிர்காலத்தில் குழந்தைகளை வறுமைக்குள் தள்ளாமல் தடுக்கும்.

குழந்தைகளுக்கு தரமான சுகாதார வசதி அளித்தல், தொலைவில் இருக்கும் குழந்தைகளுக்குத் தேவையான கல்வி கிடைக்க தொழில்நுட்ப வசதிகள் செய்து கொடுத்தல், குடும்பங்களின் நலன் சார்ந்த கொள்கைகள், அதாவது குழந்தைகளைக் கவனிக்க ஊதியத்துடன் கூடிய விடுப்பு போன்றவை அவசியம் என யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

சேவ் தி சில்ட்ரன் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி இங்கர் ஆஷிங் கூறுகையில், “கரோனா பெருந்தொற்று நோய், உலக வரலாற்றில் மிகப்பெரிய கல்வி அவசரநிலையை ஏற்படுத்திவிட்டது. ஏழ்மை நிலையை இன்னும் அதிகப்படுத்துவதன் மூலம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் குழந்தைகள், குடும்பங்கள் இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x