

உலகை ஆட்டிப் படைத்து வரும் கரோனா வைரஸ், முதன் முதலில் சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றியது. வூஹான் நகரில் சுமார் 3,900 பேரும் உலகம் முழுவதும் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.
நோய்த் தொற்றை சீனா வென்றுவிட்டதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் அறிவித்தார். ஆனால், நோய்த் தொற்று குறித்து மக்களை உடனே எச்சரிக்கவும் தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவும் வூஹான் மற்றும் ஹூபே மாகாண அரசுகள் தவறிவிட்டதாகவும் கரோனா தொற்று கட்டுப்படுத்த முடியாத வகையில் செல்ல அதிகாரிகள் அனுமதித்து விட்டதாகவும் புகார் கூறுகின்றனர்.
ஜாங் ஹென்னங் (67) என்ற பெண்மணி கூறும்போது, “கரோனா வைரஸ் இயற்கையால் தோன்றினாலும் அதனால் ஏற்பட்ட கடும் விளைவுகளுக்கு மனிதத் தவறுகளே காரணம். இதற்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்” என்றார்.
ஹென்னங், தொடக்கப்பள்ளி ஆசிரியரான தனது மகனை கடந்த பிப்ரவரியில் கரோனாவுக்கு பறிகொடுத்தார். இவரைப் போல தங்கள் குடும்பத்தினரை பறிகொடுத்த பலர் வழக்கு தொடுக்கவும் உரிய இழப்பீடு பெறவும் விரும்புகின்றனர்.
ஆனால் வழக்கு தொடரக் கூடாது என்று அதிகாரிகள் தங்களை மிரட்டுவதாகவும் வழக்கறிஞர்கள் யாரும் தங்களுக்கு உதவக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் புகார் கூறுகின்றனர்.
தந்தையை பறிகொடுத்த ஜாங் ஹை என்பவர் கூறும்போது, “அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி வூஹான் நீதிமன்றத்தில் 5 வழக்குகள் தொடுக்கப்பட்டன. 20 லட்சம் யுவான் (இந்திய ரூபாயில் சுமார் 2 கோடியே 17 லட்சம்) இழப்பீடும் பொது மன்னிப்பு கேட்கக் கோரியும் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் எவ்வித காரணமும் கூறப்படாமல் நிராகரிக்கப்பட்டன. இது தொடர்பான தகவல் சட்டப்படி எழுத்துப்பூர்வமாக அளிக்கப்படாமல் தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டது” என்றார்.