

சிரியாவில் நிகழ்ந்த இரட்டை கார் குண்டுவெடிப்பில் தீவிரவாத அமைப்புகள் மற்றும் அரசுக்கு எதிராக குரல் கொடுத்துவந்த பிரபல ட்ரூஸ் மதகுரு உட்பட 26 பேர் பலியாகி உள்ளனர்.
இதுகுறித்து சிரியாவின் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரமி அப்துல் ரஹ்மான் கூறியதாவது:
ஸ்வீதா நகரின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அருகே கார் குண்டு வெடித்தது. இதுபோல் இந்த மருத்துவமனைக்கு அருகே உள்ள தர் அல்-ஜபல் சாலையில் மற்றொரு கார் குண்டு வெடித்தது. இந்தத் தாக்குதலில் 26 பேர் பலியாயினர். மேலும் 50 பேர் காயமடைந்தனர்.
சிரியா அரசுக்கு எதிராகவும் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் அடிக்கடி கருத்து தெரிவித்து வந்த ட்ரூஸ் மதகுரு ஷேக் வாஹித் அல்-பலூஸும் அவ்வழியாக சென்றபோது இந்தத் தாக்குதலில் சிக்கி பலியானார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிரியாவில் சிறுபான்மை யினராக உள்ள ட்ரூஸ் இனத்தவர்கள் ஸ்வீதா நகரில் அதிக அளவில் வசிக்கின்றனர். போருக்கு முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் 2.3 கோடி ஆகும்.
பலூஸ் குறித்து உள்ளூர் செய்தியாளர் மலெக் அபு கீர் கூறும்போது, “ட்ரூஸ் இனத்தவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயல்பட்டு வரும் ‘ஷேக்ஸ் ஆப் டிக்னிட்டி குழு’வின் தலைவராக பலூஸ் இருந்தார்.
அப்பகுதியில் மிகவும் வலிமை மிக்கதாக விளங்கிய இந்த அமைப்பு ஐஎஸ் மற்றும் அல்-காய்தாவின் சிரியா பிரிவு ஆகியவற்றுக்கு எதிராக போரிட்டு வந்தது. மேலும் அதிபர் பஷார் அல்-அசாத் தலைமையிலான அரசுக்கு எதிராகவும் அவர் கருத்து தெரிவித்து வந்தார்” என்றார்.
சிரியாவில் கடந்த 4 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.