சிரியா அதிபர் ஆசாத்தை கொல்ல நினைத்தேன்: ட்ரம்ப்

சிரியா அதிபர் ஆசாத்தை கொல்ல நினைத்தேன்: ட்ரம்ப்
Updated on
1 min read

2017 ஆம் ஆண்டு சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தை கொலை செய்ய நினைத்தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாஸ்க் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ட்ரம்ப் கூறும்போது, “ நான் 2017 -ம் ஆண்டு சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தை கொல்ல நினைத்தேன். ஆனால் அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜிம் மேட்டிஸ் அந்த முடிவை மறுத்துவிட்டார். அதனால் அவர் முடிவுக்கே விட்டுவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது.

கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள சில இடங்களில் சண்டை அவ்வப்போது நடந்து வருகிறது. சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சிரிய போரில் ஆசாத்தின் அரசுப் படைகள், ரஷ்யா அப்பாவி மக்களை கொன்று குவிந்ததாக அமெரிக்கா குற்றம் சுமத்தியது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in