

ஷின்சோ அபேவின் ராஜினாமாவைத் தொடர்ந்து ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜப்பான் பிரதமராகப் பதவி வகித்து வந்த ஷின்சோ அபே, சில ஆண்டுகளாக குடல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இரண்டு முறை மருத்துவப் பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்குச் சென்று வந்த நிலையில், ஷின்சோ அபே காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் உடல் நிலையைக் காரணம் காட்டி பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக ஷின்சோ அபே அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஜப்பானின் ஆளும் கட்சியான லிபரல் டெமாக்ரடிக் கட்சி, அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழுவை செப்டம்பர் 1 ஆம் தேதி கூட்டியது. இதனைத் தொடர்ந்து கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
இதில் ஷின்சோ அபேவின் அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருக்கும் யோஷிஹைட் சுகா சுமார் 377 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இந்த நிலையில் யோஷிஹைட் சுகாவைப் பிரதமராகத் தேர்வு செய்து அந்நாட்டு நாடாளுமன்றம் இன்று (புதன்கிழமை) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் சுகா பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சே அபே, தான் 8 ஆண்டுகளாக சிறப்பாக ஆட்சி செய்ததாக பெருமையுடன் தெரிவித்தார்.
யோஷிஹைட் சுகாவுக்குக் காத்திருக்கும் சவால்கள்
ஜப்பான் அமைச்சரவையில் நீண்ட நாட்களாகப் பதவி வகித்து வரும் யோஷிஹைட் சுகாவுக்கு முன் கடுமையான சவால்கள் காத்திருக்கின்றன.
உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான ஜப்பானும் பிற நாடுகளைப் போல கரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகளைச் சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஜப்பான் வயதானவர்களை அதிகம் கொண்ட நாடாக அறியப்படுகிறது. ஜப்பான் மக்கள் தொகையில் மூன்றில் பகுதியினர் 65 வயதைக் கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.