யாழ்ப்பாணத்தில் தமிழக மீனவர்களுக்கு எதிராகப் பேரணி: இந்தியத் துணைத் தூதரிடம் மனு

யாழ்ப்பாணத்தில் தமிழக மீனவர்களுக்கு எதிராகப் பேரணி: இந்தியத் துணைத் தூதரிடம் மனு
Updated on
1 min read

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களைக் கட்டுப்படுத்த வலியுறுத்தில் யாழ்ப்பாணத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி திங்கட்கிழமை நடைபெற்றது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரினால் பெருமளவில் பாதிக்கப்பட்ட இலங்கை வட மாகாணத்தைச் சேர்ந்த மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மீனவர்கள் 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் 2010-ம் ஆண்டு முதல் கடலுக்குச் சென்று வருகின்றனர்.

அன்றிலிருந்து தமிழக விசைப்படகு மீனவர்கள் எல்லையைக் கடந்து வந்து இலங்கையின் கடல் வளங்களையும், வாழ்வாதாரத்தையும் அழித்து வருவதாகக் குற்றம் சாட்டினர்.

மேலும் தமிழக மீனவர்களுக்கும், இலங்கை வடமாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மீனவர்களுக்கும் நடுக்கடலில் அடிக்கடி மோதல் ஏற்பட்டும் வருகிறது.

இதனால் இந்திய - இலங்கை மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 3 கட்ட மீனவப் பேச்சுவார்த்தையும், பாஜக ஆட்சி காலத்தில் இரண்டு கட்ட பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு தீர்வு காணப்படவில்லை.

இந்நிலையில் இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி, ரோலர் மடி, சுருக்கு மடி மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி இலங்கைக் கடல் பகுதியில் தமிழக விசைப்படகு மீனவர்களை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி திங்கட்கிழமை இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் அங்குள்ள மீனவர்கள் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தூதர் பாலச்சந்திரனிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவில் தமிழக விசைப்படகு மீனவர்கள் இலங்கை கடல் வளங்களை அழித்து வருவதாகவும், இலங்கைக்கு தமிழகத்திலிருந்து போதைப்பொருட்கள் கடத்தி வருவதாகவும் இதனால் இலங்கையில் உள்ள இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாகும் நிலை உண்டாகி உள்ளது.

எனவே இந்திய அரசு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் நுழைவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in