போதைக்கு அடிமையாகி, திருடியதால் பல முறை கைது செய்த போலீஸ்காரருக்கு சிறுநீரகத்தை தானம் அளித்த பெண்

போலீஸ் அதிகாரி டெர்ரல் பாட்டருடன் ஜோஸ்லின் ஜேம்ஸ்.
போலீஸ் அதிகாரி டெர்ரல் பாட்டருடன் ஜோஸ்லின் ஜேம்ஸ்.
Updated on
1 min read

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜோஸ்லின் ஜேம்ஸ், வயது 40. இவர் கடந்த ஆண்டுகளில் போதைக்கு அடிமையாகி இருந்தார். இதனால் தனது வேலை, கார் உட்பட அனைத்தையும் இழந்தார். போதை பழக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், திருடவும் தொடங்கினார். இதனால் ‘மிகவும் தேடப்படும்’ குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவர். இந்த வழக்குகளில் போலீஸ் அதிகாரி டெர்ரல் பாட்டர் என்பவர்தான் ஜோஸ்லினை கைது செய்துள்ளார்.

ஒரு நாள் இரவு, தனது புகைப்படத்தை போட்டு, ‘வான்டட்’ என்று அறிவிப்பு வெளியானதை பார்த்தார் ஜோஸ்லின். அதைப் பார்த்து மனம் உடைந்தஜோஸ்லின், உடனடியாக போலீஸில் சரணடைந்தார். பின்னர் 6 மாதம் சிறையில் இருந்தார். பின்னர் 9 மாதம் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். தற்போது அவர் உடல்நலம் தேறியுள்ளார்.

சமீபத்தில் பேஸ்புக் பக்கத்தை ஜோஸ்லின் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, போலீஸ் அதிகாரி டெர்ரல் பாட்டர், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பதாகவும், சிறுநீரகம் தேவைப்படுவதாகவும் அவருடைய மகள் பேஸ்புக்கில் வேண்டுகோள் விடுத்திருப்பதைப் பார்த்தார்.

கடந்த 2007 முதல் 2012-ம் ஆண்டு வரையில் போதைப் பயன்படுத்தியது, திருடியது உட்பட பல வழக்குகளில் தன்னை 16 முறை கைது செய்த போலீஸ் அதிகாரி டெர்ரல் என்பதை அறிந்து, உடனடியாக அவருடைய மகளைச் சந்தித்து தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை தானம் அளிப்பதாக மனப்பூர்வமாகத் தெரிவித்தார். பின்னர் ஜோஸ்லினுடைய ஒரு சிறுநீரகம், போலீஸ் அதிகாரி டெர்ரல் பாட்டருக்கு பொருத்தப்பட்டது. தற்போது ஜோஸ்லின், டெர்ரல் இருவரும் நலமாக உள்ளனர்.

இதுகுறித்து ஜோஸ்லின் அளித்த பேட்டியில், ‘‘பேஸ்புக்கில் வந்த அந்த விளம்பரத்தை நான் முழுவதுமாகக் கூட படிக்கவில்லை. போலீஸ் அதிகாரி டெர்ரலுக்கு சிறுநீரகம் தேவை என்பதைப் மட்டும் பார்த்தேன். அப்போது, கடவுள் என்னுடன் பேசினார். அந்த மனிதருக்குத் தேவைப்படும் சிறுநீரகம் என்னிடம் உள்ளது என்று கூறினார். அவ்வளவுதான்’’ என்றார்.

இதுகுறித்து டெர்ரல் பாட்டர் கூறும்போது, ‘‘அவரைப் பற்றி எந்த தகவலும் என்னிடம் கிடையாது. இந்த நேரத்தில் கடவுளுக்குதான் நன்றி தெரிவிக்கிறேன். என் வாழ்க்கையில் அந்தப் பெண்ணை மீண்டும் அனுப்பி வைத்திருக்கிறார்’’ என்று உருக்கமாக தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in