Published : 09 Sep 2015 10:45 AM
Last Updated : 09 Sep 2015 10:45 AM

உலக மசாலா: குழந்தை- கங்காரு நட்பு!

அமெரிக்காவில் வசிக்கிறார் குழந்தை எழுத்தாளர் ஜுலியா ஜேசன். அவரது 18 மாதக் குழந்தை அலியாவுக்குத் தோழனாக இருக்கிறது ஒரு கங்காரு. அலியாவும் கங்காருவும் ஒரே உணவைச் சாப்பிடுகிறார்கள், ஒன்றாகவே விளையாடுகிறார்கள். மூர்க்கமான விலங்காக கருதப்படும் கங்காரு, ஒரு குழந்தையிடம் இத்தனை அன்பு காட்டுவது எல்லோருக்கும் ஆச்சரியத்தைத் தருகிறது.

‘‘என்னுடைய புத்தகங்களில் விலங்குகளைத்தான் கதாபாத்திரங் களாகப் பயன்படுத்தி வருகிறேன். பூமேரூ என்ற கங்காரு என் கதைகளில் வரும். என் குழந்தை பிறந்த உடனே நிஜக் கங்காருவை அறிமுகம் செய்துவிட்டேன். குழந்தை வளர, வளர கங்காருவுக்கும் அலியாவுக்கும் நட்பு இறுக்கமானது. கங்காருவின் காது, வால், மூக்கு என்று எதைப் பிடித்து அலியா இழுத்தாலும் கங்காரு அமைதியாகவே இருக்கும். பூமேரூவுடன் அலியா இருக்கும்போது நான் அவள் குறித்து கவலைப்பட மாட்டேன்’’ என்கிறார் ஜுலியா.

ஆச்சரியமான நட்புதான்!

அமெரிக்காவின் கெண்டகி வனவிலங்குகள் பூங்காவில் வசிக்கிறது ஜெலானி கொரில்லா. பூங்காவுக்கு வந்த ஓர் இளைஞர் கொரில்லாவைப் புகைப்படங்களும் வீடியோவும் எடுத்தார். பிறகு கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்த ஜெலானியிடம் ஒவ்வொரு புகைப்படத்தையும் காட்டினார். போனில் படங்களைப் பார்த்த ஜெலானி, மீண்டும் மீண்டும் படங்களைக் காட்டுமாறு சைகை செய்தது.

ஒருகட்டத்தில் கண்ணாடியில் இளைஞர் சாய்ந்துகொள்ள, அவர் தோள் மீது உரசும் விதத்தில் கண்ணாடியில் கொரில்லாவும் சாய்ந்துகொண்டு படங்களைப் பார்த்து ரசித்தது. ஒவ்வொரு படத்தையும் பார்த்த பிறகு, அடுத்த படத்துக்காக ஆவலுடன் காத்திருந்தது. மனிதர்களைப் போலவே பல விஷயங்களில் ஒத்திருக்கும் கொரில்லாவின் நடவடிக்கைகள் சுவாரசியப்படுத்துகின்றன.

கலக்கல் ஜெலானி! விநோத மனிதர்கள்!

லண்டனில் வசிக்கும் கிங்க்ஸ்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் வில் ப்ரூகர் ஒரு வித்தியாசமான பிராஜக்டைச் செய்து முடித்திருக்கிறார். பிரிட்டனின் புகழ்பெற்ற பாப் பாடகர் டேவிட் பவ்வி. ஓராண்டு முழுவதும் டேவிட் போல வாழ்ந்திருக்கிறார் ப்ரூகர். டேவிட் சாப்பிட்ட உணவுகள், படித்த புத்தகங்கள், சுற்றுலா சென்று வந்த இடங்கள் என்று ஒவ்வொன்றையும் அப்படியே செய்து பார்த்திருக்கிறார். 74ம் ஆண்டு டேவிட் தலைமுடிக்கு ஆரஞ்சு வண்ணத்தையும் இமைகளில் நீல வண்ணத்தையும் போட்டுக்கொள்வார்.

கண்களைப் பறிக்கும் மஞ்சள் சூட் அணிந்துகொள்வார். இவற்றைச் செய்வதற்கு மட்டும் ப்ரூகர் திணறிப் போனார். ’’புகழ்பெற்ற ஒருவரைப் போல வாழ்ந்து பார்ப்பது அத்தனை எளிதானதல்ல. ஒரு ஆராய்ச்சிக்காகவே இதைச் செய்தேன். ஒரு வருடம் முழுவதும் டேவிட் போலவே உடை அணிந்து, சாப்பிட்டு வாழ்ந்தாலும் நான் டேவிட் இல்லை என்பதில் உறுதியாக இருந்தேன். என்னதான் செய்தாலும் அசலைப் போல இன்னொன்றை உருவாக்கவே முடியாது. இது படிப்புத் தொடர்பான ஆய்வுதான். மற்றபடி டேவிட் என்று பொதுமக்களை நான் ஏமாற்ற நினைக்கவில்லை’’ என்கிறார் ப்ரூகர்.

ம்... ஒருவரைப் போல வாழ்ந்து பார்த்து… அப்படி என்ன தெரிந்துகொள்கிறார்களோ…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x