

இலங்கையில் சமூக நல்லிணக்கத்தைப் பேண அந்த நாட்டு அரசு உறுதியுடன் செயல்படுகிறது என்று அமெரிக்கா புகழாரம் சூட்டியுள்ளது.
தெற்காசியா, மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க துணைச்செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இலங்கையில் புதிய அரசு பதவியேற்று 9 மாதங்களாகிறது. இதில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. நாட்டில் சமூக நல்லிணக்கத்தையும் மக்களிடம் நம்பிக்கையையும் ஏற்படுத்த புதிய அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.
இது வரவேற்கத்தக்கது. எனினும் இந்தப் பயணத்தில் இன்னும் நீண்ட தொலைவு செல்ல வேண்டியுள்ளது. போரினால் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்த மேலும் அதிக அக்கறை செலுத்த வேண்டும். இதற்கு காலஅவகாசம் தேவை.
இலங்கையில் அமைதியும் வளமும் பெருக வேண்டும். அனைத்து தரப்பு மக்களுக்கும் சமஉரிமை கிடைக்க வேண்டும். சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளும் வகையில் நேர்மையான விசாரணையை இலங்கை அரசு நடத்த வேண்டும்.
போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து இலங்கை அரசு ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.
இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு காண அந்த நாட்டு உறுதியாக இருந்தால் அமெரிக்கா நிச்சயம் உதவிகளை வழங்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இலங்கை போர்க்குற்றம் குறித்து அந்த நாட்டு அரசுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்காதான் தீர்மானம் கொண்டு வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் கொழும்பு சென்ற நிஷா தேசாய் பிஸ்வால் கூறியபோது, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு சாதகமாகவே அமெரிக்கா செயல்படும் என்று உறுதியளித்தது நினைவுகூரத்தக்கது.